- கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்றம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
- வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய 9 பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
- 2019ஆம் ஆண்டு 269 உயிர்களைப் பலிகொண்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில், 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
- 8,900 பக்கங்களைக் கொண்ட 9 தொகுதிக் குற்றப்பத்திரிகையை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், நீண்ட சாட்சி விசாரணைகளின் பின்னர் இறுதித் தீர்ப்பை எட்டியுள்ளது.
- தீர்ப்பு அறிவிப்பை முன்னிட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உச்சக்கட்டப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2019 ஏப்ரல் 21—முழு நாடும் அமைதியில் மூழ்கியிருந்த அந்த உயிர்த்த ஞாயிறு காலைப் பொழுதில், இலங்கையின் 3 பிரதான கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய மனிதவெடிகுண்டுகள் 269 அப்பாவிகளின் உயிர்களைக் குடித்தன; 500க்கும் மேற்பட்டோரை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தின. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 9 தற்கொலை குண்டுதாரிகளால் அரங்கேற்றப்பட்ட அந்த கோரத் தாண்டவத்திற்குப் பின்னால் இருந்த சதிவலை பின்னல்கள் என்ன? பல வருடங்களாக நாடே எதிர்பார்த்திருந்த அந்தப் பாரிய வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று முழு நாட்டையும் உலுக்கியுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகமே இன்று காலை முதல் ஒரு பாதுகாப்புப் பாசறையாக உருவெடுத்திருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள், நடமாடும் சிசிடிவி கண்காணிப்புப் பிரிவுகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்க, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்களும் நீதிமன்றினுள் பிரவேசித்தனர். காலை 11.30 மணியளவில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஆசனத்தில் அமர்ந்ததும் நீதிமன்ற அறையே நிசப்தமானது.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோப்புகள் சாதாரணமானவை அல்ல. 8,900 பக்கங்களைக் கொண்ட 9 பாரிய தொகுதிகள், 2,309 சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் மற்றும் 23,270 இற்கும் அதிகமான பாரதூரமான குற்றச்சாட்டுகள் என வழக்கின் கனதி அளப்பரியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் தீட்டியமை, ஆயுதப் பயிற்சிகளை வழங்கியமை மற்றும் இனமுரண்பாடுகளைத் தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளை விரிவாக ஆராய்ந்த தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சதித்திட்டம் தொடர்பான ஒரு முக்கிய சட்ட விளக்கத்தை அதிரடியாக முன்வைத்தார்.
“சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வரிசையாக நிற்க வேண்டிய அவசியமில்லை; ஆரம்பத்தில் இணைந்தவர், இடையில் வந்தவர், இறுதியில் கைகோர்த்தவர் என அனைவருமே அச்சதியின் சம பங்காளிகளே” என்று குறிப்பிட்ட நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகளின் வாதங்களை ஒவ்வொன்றாக அலசியது. இதில் முதலாவது பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, கபூர் மாமா, ஹயாத்து மொஹம்மது மில்ஹான், சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா உள்ளிட்ட 15 பிரதிவாதிகளின் தற்காப்பு வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக, மூன்று நீதிபதிகளும் ஒருமித்த குரலில் தங்களது இறுதித் தீர்ப்பை அறிவித்தனர். அதன்படி, 15 பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்; அதேவேளை எஞ்சிய 9 பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் போதியளவு நிரூபிக்கப்படாததால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அந்த 15 பேருக்கான தண்டனை விபரங்களை நீதிமன்றம் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்து வருகின்றது.


