- உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவு.
- இலங்கையில் மதுசாரப் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு சராசரியாக 50 பேர் பலியாவதுடன், ஆண்டுக்கு 20,000 உயிர்கள் வரை பறிபோகின்றன.
- உலகளவில் மதுவினால் ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக சர்வதேச தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இன்றைய தினம் (ஒக்டோபர் 03) நாடளாவிய ரீதியில் மது விற்பனையை முற்றாக முடக்கும் வகையில், சுங்கவரி உரிமம் பெற்ற அனைத்து மதுபான நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு நாளுக்கான இந்தத் தடைக்குப் பின்னால் மறைந்திருக்கும் உயிர்ப்பலிகளின் பின்னணி, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் மதுசாரப் பயன்பாட்டின் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் அநியாயமாக உயிரிழக்கின்றனர். அதாவது, ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 வரையிலான உயிர்கள் மதுவின் கோரப்பிடியில் சிக்கி மடிகின்றன. இது தேசிய ரீதியில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியிலும் பெரும் பேரழிவாகவே தொடர்கிறது.
சர்வதேச அளவில் மதுசாரப் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் பலியாகும் மனித உயிர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தொடுகிறது. உலகளவில் முறையான முன்னெச்சரிக்கையால் தடுக்கக்கூடிய மரணங்களில், 10 இல் 8 மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே (NCDs) ஏற்படுகின்றன. இந்தத் தொற்றா நோய்களைத் தூண்டும் முதன்மையான நான்கு ஆபத்துக் காரணிகளில் ஒன்றாக மதுசாரம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த அபாயகரமான உண்மை இன்று நேற்றல்ல, 1980–1990 தசாப்தங்களிலேயே உலக சுகாதார நிறுவனத்தாலும் (WHO) சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளாலும் பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டது. பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு மதுவே மூலக்காரணம் என்ற விழிப்புணர்வு உலகளவில் தீவிரமடைந்ததன் விளைவாகவே, 1988 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து “மதுசாரமற்ற பிரச்சார வாரத்தை” முன்னெடுத்தன.
மக்களிடையே கிடைத்த பாரிய ஆதரவைத் தொடர்ந்து, இந்த விழிப்புணர்வை வருடத்தில் ஒரு நாளாகக் குவியப்படுத்த உலக சுகாதார நிறுவனம் தீர்மானித்தது. மது வணிகத்தின் மறைமுகத் தாக்கங்களை மக்களுக்கு உணர்த்தி, மதுவிலிருந்து முற்றாக விலகியிருப்பதை நோக்கமாகக் கொண்டே ஆண்டுதோறும் ஒக்டோபர் 03 ஆம் திகதி ‘உலக மது ஒழிப்பு தினமாக’ உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.


