- புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் கலக்கிய ‘Open Day 2026’: உயர்கல்விக்கு புதுப்பாதை!
- உயர்கல்வி வழிகாட்டலுடன் AI களமிறங்கிய ‘Open Day 2026’ – புத்தளத்தில் அமர்க்களம்!
- மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சாதனையாளருக்கு ‘Open Day’ மேடையில் பலத்த கௌரவம்!
புத்தளம் நகரில் உயர்கல்வித் துறையில் புது உத்வேகத்தை ஏற்படுத்தும் நோக்கில், புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ‘Open Day 2026’ நிகழ்வு கடந்த வார இறுதியில் (ஒக்டோபர் 03, 04) மிக விமரிசையாக இடம்பெற்று முடிந்தது. எதிர்காலக் கல்விப் பாதையைத் திட்டமிடும் நோக்கில் பெருமளவிலானோர் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இரு தினங்களாக அரங்கேறிய இந்நிகழ்வின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்வுகள் புத்தளம் மாநகர சபை முதல்வர் M.F. ரின்சாத் அஹமட் தலைமையில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். ஓய்வுபெற்ற புத்தளம் ஆசிரியர் மைய முகாமையாளர் திரு. M.H.M. நவாஸ், ஆனமடுவ ஆசிரியர் மைய முகாமையாளர் திருமதி. R.A.D. சரியா காந்தி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் திரு. I.A. நஜீம், ஒட்டிசுட்டான் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. A.A.M. அஸாம், முசலி பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் திரு. M.N.M. ரசீப் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகப் பங்கேற்றனர். இவர்களுடன் தொழில் வழிகாட்டல் ஆலோசகர் திரு. M.R.M. சவ்வாப், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் களத்தில் நின்றனர்.
இதன்போது, இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான பல்துறைப் பட்டப்படிப்புகளான சமூக விஞ்ஞானம் (BA in Social Science), தகவல் தொழில்நுட்பம் (BSc in IT), மென்பொருள் பொறியியல் (Bachelor of Software Engineering – Hons), ஆரம்பக்கல்வி (BEd in Primary Education) மற்றும் தமிழ் கற்பித்தல் (BA in Tamil and Tamil Language teaching) போன்ற கற்கை நெறிகள் தொடர்பிலான தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. அத்துடன், சமகால டிஜிட்டல் உலகின் பிரதான பேசுபொருளான AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வும் அங்கு வழங்கப்பட்டமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, கல்விச் சாதனையை கௌரவிக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமும் அரங்கேறியது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட பதிவாளர் சேவை (தரம் II, வகுப்பு III) திறந்த போட்டிப் பரீட்சையில், அகில இலங்கை ரீதியாகத் தெரிவான 54 பேரில் 41 ஆம் இடத்தையும், புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்று மாவட்டத்தின் ஒரேயொரு தெரிவாக சாதனை படைத்த இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டதாரி திரு. M.N.M. ரசீப் (தற்போது முசலி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர்) மேடைக்கு அழைக்கப்பட்டார். இவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இளங்கலை பட்டதாரிகள் இணைந்து கௌரவ நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தமை விஷேட அம்சமாகும்.




