- நள்ளிரவில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த நபர்: ஆணமடுவவில் இளம் தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
- கூரையைப் பிரித்து உள்நுழைந்து அட்டகாசம்: மனைவியை தீண்ட முயன்று, கணவனைத் தாக்கித் தப்பிய நபர்!
- பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய தம்பதி; நள்ளிரவு 1.30 மணிக்கு படுக்கையறையில் காத்திருந்த பயங்கரம்!
ஜுட் சமந்த
ஆண்டிகம, கீரியன்கல்லி வீதி, கட்டக்கடுவ பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளம் பெண்ணொருவரின் முறைப்பாட்டையடுத்து, ஆணமடுவ பொலிஸார் பரபரப்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீட்டின் கூரையைப் பிரித்து நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த நபரொருவர், இளம் பெண்ணை தகாத முறையில் தீண்ட முயன்றதுடன், அவரது கணவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நண்பரின் மனைவியை வரவேற்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் இத்தம்பதியினர் கலந்துகொண்டுள்ளனர். மதுபானம் அருந்தியிருந்த கணவருடன் அதிகாலைப் பொழுதில் வீடு திரும்பிய பெண், நிம்மதியாக உறங்கச் சென்றுள்ளார்.
ஆனால், அதிகாலை 1.30 மணியளவில் யாரோ ஒருவர் தன்னைத் தொடுவதை உணர்ந்து அப்பெண் திடுக்கிட்டு கண்விழித்துள்ளார். படுக்கையறைக்குள் எவரும் தென்படாத நிலையில், சந்தேகமடைந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டிலின் கீழ் நபர் ஒருவர் பதுங்கியிருப்பதை கண்ட அவர், உடனடியாக கணவரை உசுப்பி எழுப்பியுள்ளார்.
கணவர் அவரை வெளியே வருமாறு எச்சரித்தபோதும் அந்நபர் அசைவற்று இருந்துள்ளார். தொடர்ந்து கணவர் அவரது காலைப் பிடித்து பலவந்தமாக வெளியே இழுத்தபோது, அங்கு நின்றவர் அந்நியர் அல்ல — தாம் சற்று முன்னர் சென்ற விருந்துபசார வீட்டு உரிமையாளரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. தனக்கு பிடியாணை உள்ளதால் பொலிஸாரிடம் இருந்து தப்பியே அங்கு பதுங்கியதாக அவர் முன்னுக்குப் பின் முரணான காரணத்தைக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மூண்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், கணவர் படுகாயமடைந்து ஆணமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூரையின் ஓடுகளை அகற்றி வீட்டிற்குள் புகுந்த அந்நபர், தாக்குதலின் பின்னர் பிரதான கதவைத் திறந்து கொண்டு இருளில் தப்பி ஓடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஆணமடுவ பொலிஸார் அவரைத் தேடி வலைவீசியுள்ளனர்.


