ஜுட் சமந்த
புத்தளம்: புத்தளம் – கல்லடி பகுதியில் அமைந்துள்ள பிரதான மின் விநியோக உப மின்நிலையத்தில் நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 3.00 மணியளவில், நாடே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், கல்லடி உப மின்நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் இரகசியமாக அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார். இதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், உடனடியாகத் தனது கடமைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி அந்த நபரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்ட அடுத்த கணமே, அந்த நபர் இருளைப் பயன்படுத்தி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த புத்தளம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில், தரையில் பல இடங்களில் சிதறிக்கிடந்த இரத்தக் கறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
மின்நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க செப்பு கம்பிகளைத் திருடும் திட்டத்துடனேயே குறித்த நபர் அங்கு ஊடுருவியிருக்கக் கூடும் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தக் காயங்களுடன் தப்பியோடிய மர்ம நபர் யார்? அவர் சிகிச்சைக்காக புத்தளம் அல்லது அதனைச் சூழவுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை எவரும் சிகிச்சைக்காகச் சேரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சந்தேகநபரை வலைவீசித் தேடி வரும் புத்தளம் பொலிஸார், மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


