மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நோக்கிய தனது அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை (10) வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அவசர நடவடிக்கையானது, பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வான்வெளிப் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், இந்த நெருக்கடி இலங்கைக்கு மட்டுமே உரித்தானதல்ல;பிராந்தியத்தையே உலுக்கும் ஒரு சர்வதேச வான்வெளிப் பேரிடராக இது மாறியுள்ளது.
யெமனின் ஹூதி அமைப்பினர் ரியாத் பகுதியை இலக்கு வைத்து முன்னெடுத்து வரும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரமே இந்தப் பாரிய முடக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்தத் திடீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, உலகெங்கிலும் இருந்து ரியாத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணிக்கவிருந்த 300 இற்கும் அதிகமான சர்வதேச விமானங்கள் நடுவானிலும் தரையிலும் அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளன.
சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்கள் அடுத்தடுத்து சேவைகளை முடக்கி வருவதால், ரியாத் நோக்கிய வான்வழித் தடம் தற்போது முற்றாகப் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் நேரடித் தாக்கம், மத்திய கிழக்கில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்களையும் புலம்பெயர் பயணிகளையும் பெரும் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், அடுத்தகட்ட விமான அட்டவணைகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உத்தியோகபூர்வ தகவல் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


