- தமிழக இடைத்தேர்தல் களம் அதிரடி: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. இமாலய வெற்றி!
- தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு பெரும் சவால்: இரண்டு தொகுதிகளையும் தட்டித்தூக்கிய த.வெ.க.!
- 109 ஆக உயர்ந்த சட்டப்பேரவை பலம்: 4 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமா?
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), இரு தொகுதிகளிலும் தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களைப் பாரிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அமோக வெற்றியைத் தனதாக்கியுள்ளது.
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலின் இமாலய வெற்றி:
மொத்தம் 27 வேட்பாளர்கள் களமிறங்கிய மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன.21 சுற்றுகளாக எண்ணப்பட்ட இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளைப் பெற்று 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள, நாம் தமிழர் கட்சி 1,703 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,441 வாக்குகளையும் மாத்திரமே பெற்றுக்கொண்டன.
தாராபுரத்தைக் கைப்பற்றிய சத்யபாமா:
அதேபோன்று, 22 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்திய தாராபுரம் தொகுதியிலும் த.வெ.க. தனது பலத்தை நிரூபித்துள்ளது. 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி, 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார். இவருக்குக் கடும் சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகளைப் பெற்று 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்தார். இங்கு அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4,954 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,099 வாக்குகளையும் பெற்றன.
கொண்டாட்டத்தில் தொண்டர்கள்; அமைச்சர்கள் பெருமிதம்:
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக் காற்று த.வெ.க. பக்கம் வீசியதைத் தொடர்ந்து, கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல் பெறுபேறுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், “கடந்த நான்கு மாத கால எமது ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் வழங்கியிருக்கின்ற மிகச் சிறந்த அங்கீகாரமே இந்த வெற்றி” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.


