- பாகிஸ்தானில் பற்றி எரியும் அரசியல் நெருப்பு: இம்ரான் கானின் கோட்டையில் அவசரகால சட்டம் – ராணுவம் குவிப்பு!
- முதலமைச்சர் மர்மமான முறையில் மாயம்: கைபர் பக்துன்க்வாவில் ஆட்சி கலைப்பு – அடுத்தது என்ன?
- நெருப்போடு விளையாடுகிறதா ராணுவம்? பேரழிவை நோக்கி நகரும் பாகிஸ்தான் – அதிர்ச்சிப் பின்னணி!
பள்ளிக்கூடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டன. இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீதிகளில் பாரிய கொள்கலன்கள் (Containers) குறுக்கே நிறுத்தப்பட்டு பெருவழிகள் முடக்கப்பட்டன. அடுத்த சில மணிநேரங்களில் கனரக ஆயுதங்களுடன் ராணுவப் படைகள் வீதிகளில் அணிவகுத்தன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் பலம் வாய்ந்த மாகாணமான கைபர் பக்துன்க்வா, ஒரே இரவில் அதிகார வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டுவரப்பட்டு அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தில் 13 வருடங்களாக ஆட்சியில் இருந்த இம்ரான் கானின் பி.டி.ஐ. (PTI) அரசாங்கத்தை ஒரே அறிவிப்பில் மத்திய அரசு இடைநிறுத்தியுள்ளது. மாகாண மக்கள் தொகையைப் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே அரசியலமைப்புக்கு உட்பட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அத்தா தரார் தெரிவித்துள்ளார். மாகாண அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயற்பட்டதாக அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தாலும், அதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரங்களையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், இந்த அவசரகாலச் சட்டத்தின் பின்னணியில் வெடிக்கக் காத்திருந்த அரசியல் சூறாவளியொன்று மறைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த ஒரு வார காலமாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் மாகாணம் முழுவதும் தொடர் பேரணிகளை நடத்தி அதிகார மையங்களை அதிரச் செய்தனர். இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாகாண முதலமைச்சர் சொஹைல் அப்ரிடி தற்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக பி.டி.ஐ. கட்சியினர் குற்றம் சாட்ட, அவசியமான பாதுகாப்பு காவலில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
ஏற்கெனவே இம்ரான் கானின் சகோதரிகள் மூவர் ஆதரவாளர்களைத் திரட்டிய குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிறைப்படுத்தப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டிருந்த நிலையில், அவரை மீட்க அவரது கட்சியினர் தீவிர களப்போராட்டங்களில் இறங்கியதே ராணுவத்தையும் மத்திய அரசையும் இத்தகைய கடுமையான முடிவை நோக்கித் தள்ளியுள்ளது.
ராணுவத்தின் செல்வாக்கு தற்போது பாகிஸ்தான் ஆட்சியில் உச்சத்தில் இருப்பதாகவும், வெள்ளை மாளிகையுடனான நல்லுறவு தங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்ற அதீத துணிச்சலிலேயே ராணுவக் கட்டமைப்பு இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், மறுபுறத்தில் பாகிஸ்தானின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. உலக பயங்கரவாதக் குறியீட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி பெரும் பதற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
ஒருபுறம் அண்டை நாட்டுப் பகைகள், மறுபுறம் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் எழுச்சி எனப் பலமுனை சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு நாடு, தனது சொந்த மக்கள் மீதே இத்தகைய அடக்குமுறைகளை பிரயோகிப்பது பேரழிவிற்கே வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் ஆதரவு பெற்ற ஒரு மாகாண ஆட்சியை முடக்குவதன் மூலம் மத்திய அரசு நெருப்போடு விளையாடத் தொடங்கியுள்ளது; கண்ணெதிரே மோதி வெடிக்கக் காத்திருக்கும் தொடருந்து போல (Train Crash), இந்த நெருக்கடியை யாராலும் தடுக்க முடியாத ஒரு விளிம்பிற்கு பாகிஸ்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.




