- கற்பிட்டி கடற்படை முகாமில் அதிர்ச்சி: T-56 துப்பாக்கியை திருடி விற்ற 24 வயது சிப்பாய் சிக்கினார்!
- வாட்டர் ஜெட் படகிலிருந்து மாயமான துப்பாக்கி: கடற்படை முகாமுக்குள் நடந்த பகீர் கடத்தல்!
- கற்பிட்டியிலிருந்து அம்பலாந்தோட்டை வரை நீண்ட துப்பாக்கி கடத்தல்: சி.ஐ.டி வசம் சிக்கிய கடற்படை வீரர்!
ஜுட் சமந்த
கடற்படை முகாமின் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தையே அதிரவைக்கும் வகையில், அதிவேக ரோந்துப் படகில் இருந்த T-56 ரக துப்பாக்கியொன்று கடத்தப்பட்ட சம்பவம் புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி விஜித கடற்படை முகாமில் உள்ள ஒழுக்காற்றுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி, முகாமின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் துப்பாக்கி காணாமல் போயுள்ளமை குறித்து புத்தளம் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அவசர முறைப்பாடொன்றை மேற்கொண்டார். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக களத்தில் இறங்கினர்.
விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில், முகாமிற்குள்ளேயே பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவரே இந்த விபரீதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. அதன்படி, காலி – போத்தல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்படை தொழில்நுட்பப் பிரிவு சிப்பாய் ஒருவரைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த 5ஆம் திகதி இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த முகாமிற்குச் சொந்தமான வாட்டர் ஜெட் (Water Jet) படகில் வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கியைத் திட்டமிட்டுத் திருடிய இந்த சிப்பாய், முகாமுக்கு வெளியே காரில் காத்திருந்த இரு நபர்களிடம் அதனைப் பத்திரமாகக் கையளித்துள்ளார் என்பது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.
துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டு காரில் தப்பிச் சென்ற இருவரும் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள வலைப்பின்னலைக் கண்டறியும் நோக்கில், கைது செய்யப்பட்ட சிப்பாய் மேலதிக தீவிர விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


