- சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான ஊழல் விசாரணை: தனிப்பட்ட சாரதிகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி அழைப்பு!
- சட்டவிரோத வாகனப் பயன்பாடும் விபத்தும்: சபாநாயகரைச் சுற்றி இறுகும் விசாரணைப் பிடி – நாளை வெளியாகும் உண்மைகள்?
- 50 குற்றச்சாட்டுகளுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை: சபாநாயகரின் வாகன விவகாரம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர விசாரணை!
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கமைய, சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர் குழாமில் கடமையாற்றும் இரண்டு சாரதிகளை நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஊடாக, ஆணைக்குழுவின் விசேட புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.ஜி. அபேசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் மையப்புள்ளியாகப் பாராளுமன்றத்திற்குச் சொந்தமான ‘NC 4923’ எனும் இலக்கத்தகடு கொண்ட வாகனம் மாறியுள்ளது. குறித்த வாகனத்தைப் பொறுப்பேற்றமை, அதன் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் 2025 செப்டம்பர் மாதம் முதல் இதுவரையான பயணச் சுருக்க அறிக்கைகள் அனைத்தையும் சாரதிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வருடம் ஜனவரி 07 ஆம் திகதி அந்த வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பான சகல ஆவணங்களையும் தம்வசம் கொண்டு வருமாறு ஆணைக்குழு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பாரிய விசாரணைப் பொறிமுறை ஆரம்பமானதன் பின்னணியில் ஒரு முக்கிய முறைப்பாடு உள்ளது. பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாளர் குழாம் பிரதானியுமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையிலேயே, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சபாநாயகருக்கு எதிரான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சட்டத்தரணி குலரத்னவின் முறைப்பாட்டில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது, சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக இரண்டு வாகனங்கள் மாத்திரமே உரித்தான போதிலும், எவ்வித அனுமதியுமின்றி ஊடகப் பிரிவொன்றை ஸ்தாபித்து, அப்பிரிவிற்காகப் பாராளுமன்ற வாகனமொன்றைச் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சபாநாயகரின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதே அந்த வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பழுதுபார்ப்பதற்குக் காப்புறுதிப் பணத்திற்கு மேலதிகமாகப் பாராளுமன்ற நிதியும் செலவிடப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்றப் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது. இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50 குற்றச்சாட்டுகள் அடங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையும் அண்மையில் சமர்ப்பித்துள்ளனர். அதில், உத்தியோகபூர்வ இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு வாகனத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமையும் பிரதான குற்றச்சாட்டாக உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


