- உலகையே உலுக்கிய 1.5 கோடி இரகசிய ஆவணங்கள்: டிரம்ப், எப்ஸ்டீன் மற்றும் ரஷ்யப் பணப்பரிமாற்றக் குட்டுகளை உடைத்த ‘டொய்ச் வங்கி’ லீக்ஸ்!
- ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 582 மில்லியன் டொலர் மர்மப் பணம் & டிரம்பின் இரகசிய வரி ஆவணக் கசிவு: ஜேர்மன் வங்கியின் அதிர்ச்சிப் பின்னணி!
- பணமோசடி வலையமைப்பில் டொனால்ட் டிரம்ப் நிறுவனங்கள்? 230 ஊடகவியலாளர்கள் இணைந்து வெளியிட்ட ‘இன்சைட் டொய்ச் வங்கி’ புலனாய்வு!
உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அரங்கை ஒரே இரவில் அதிரவைக்கும் வகையில், ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான டொய்ச் வங்கியின் (Deutsche Bank) 1.5 கோடிக்கும் அதிகமான இரகசிய உள்ளக ஆவணங்கள் கசிந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் உலகின் அதிகாரமிக்க பல புள்ளிகளுக்கும் இந்த வங்கிக்கும் இடையிலான மர்மமான நிதித் தொடர்புகளை இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. ‘இன்சைட் டொய்ச் வங்கி’ (Inside Deutsche Bank) என்ற பெயரில் சர்வதேச ஊடகக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புலனாய்வு அறிக்கை, பணமோசடியைத் தடுக்கத் தவறியதால் இழந்த நற்பெயரை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்த அந்த வங்கியை மீண்டும் பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய கோட்டைக்குள் இருந்து 1.5 கோடி ஆவணங்கள் எப்படி வெளியே கசிந்தன?
அதன் பின்னணியில் இரண்டு துணிச்சலான தகவல் வழங்குநர்கள் (Whistleblowers) உள்ளனர்! வங்கியின் சட்டவிரோதச் செயற்பாடுகளைப் பொதுமக்களின் நலன் கருதி அம்பலப்படுத்த விரும்பிய அந்த இருவரும், எவ்விதப் பணமும் பெறாமல் சுமார் 90 இலட்சம் மின்னஞ்சல்கள், கூட்டக் குறிப்புகள் மற்றும் நிதிக்குற்ற அறிக்கைகளை ஊடகவியலாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்திய ஊடகவியலாளர் ஜோசி ஜோசப் மற்றும் தென்னாபிரிக்க ஊடகவியலாளர் கதீஜா ஷெரிஃப் ஆகியோருக்குக் கிடைத்த இந்தத் தரவுகளை, ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘பைனான்சியல் டைம்ஸ்’ உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து அலசி ஆராய்ந்துள்ளனர். இந்த ஆவணங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து மறைந்திருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
1990களில் டிரம்பின் வணிகங்கள் தொடர்ச்சியாகத் திவாலானபோதும், அவருக்குக் கடன் கொடுத்துத் தூக்கிவிட்ட வங்கி டொய்ச் வங்கியே; 2021 ஜனவரி வரை சுமார் 340 மில்லியன் டொலர் கடனுடன் அவரது மிகப்பெரிய கடனாளியாக இந்த வங்கி இருந்தது. ஆனால், தற்போது கசிந்துள்ள ஆவணங்களின்படி, டிரம்பிற்குச் சொந்தமான நிறுவனங்களின் 3 மில்லியன் டொலருக்கும் அதிகமான பரிவர்த்தனைகள், ரஷ்யா மற்றும் அசர்பைஜானின் சந்தேகத்திற்குரிய பணமோசடி வலையமைப்புகளுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதைவிட அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், 2017இல் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது இரகசிய வரி ஆவணங்களை வங்கி தவறுதலாக வேறொரு வாடிக்கையாளரின் கணக்காளருக்கு அனுப்பியதுடன், அந்தத் தவறை டிரம்பிடம் கூறாமலேயே மறைத்துள்ளது. ஆசியான் உச்சிமாநாட்டிற்காக மணிலா சென்றிருந்த டிரம்பிடம் இது குறித்துக் கேட்டபோது, “அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது, அது சட்டவிரோதமானது” என அவர் கோபத்துடன் பதிலளித்துள்ளார். டிரம்பின் கதை இப்படியென்றால், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் விடயத்தில் வங்கி செய்த காரியம் அதைவிடப் பூதாகரமானது!

சிறுமிகளைப் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2013 முதல் 2018 வரை ஜெஃப்ரி எப்ஸ்டீனைத் தனது வாடிக்கையாளராக டொய்ச் வங்கி வைத்திருந்தது. கசிந்துள்ள ஆவணங்களின்படி, எப்ஸ்டீனுடன் தொடர்புடைய சுமார் 582 மில்லியன் டொலர் பரிவர்த்தனைகளை வங்கி உள்ளக ரீதியில் ‘சந்தேகத்திற்குரியவை’ எனக் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவற்றை மறைத்துள்ளது.
இது முன்னர் அமெரிக்க செனட் சபை விசாரணையில் கண்டறியப்பட்ட தொகையை விட இருமடங்கிற்கும் அதிகமாகும். 2019இல் நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிரிழந்த நிலையில், இந்த ஆவணங்கள் தற்போது அமெரிக்க வழக்கறிஞர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. “இவை பல வருடங்களுக்கு முந்தைய விடயங்கள்; இன்று டொய்ச் வங்கி முற்றிலும் மாறுபட்ட ஒரு வங்கி” என வங்கி நிர்வாகம் தன்னைத் தற்காத்துக்கொண்டாலும், கசிந்துள்ள இந்த 1.5 கோடி ஆவணங்கள் உலக அதிகார மையங்களின் தூக்கத்தைக் கலைத்துள்ளன.


