அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் விஷேட வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன 1 லட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மற்றுமொரு வேளைத்திட்டம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில், மன்னார் மாவட்டத்தில் இருந்து யுத்தம் காரணமாக புத்தளத்தில் இடம்பெயர்ந்து புத்தளம் எருக்கலம்பிட்டியில் வாழும் மக்களின் நன்மை கருதி சீரற்ற போக்குவரத்து பாதையை புனரமைக்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டியின் A,B,C பகுதியில் உள்ள சீரற்ற சில போக்குவரத்து பாதையை புனரமைக்கும் திட்டத்தில், C பகுதியில் அமைந்துள்ள மையவாடி வீதி 650 மீற்றர் வரையிலும், B பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை வீதி 650 மீற்றர் வரையிலும், மற்றும் A பகுதியில் ஐந்து உள்ளக வீதிக்கான 1250 மீற்றர் பாதையும் உள்ளடங்களாக சுமார் 55.6 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களினால் கடந்த ஞாயிறு (24) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரிரஹீம், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினுடைய முஸ்லீம் பிரிவிற்கான அமைப்பாளருமான ஜனாப் ரியாஸ் அவர்களும், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களும், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
புத்தளம் எருக்கலம்பிட்டியின் ஏனைய குறுக்கு வீதிகள் காபட் வீதிகளாக மாற்றப்படும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரிரஹீம் தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களின் வாக்குகளே தனத வெற்றிக்கு காரணம் எனவும் தெரித்தமை குறிப்பிடத்தக்கது.