கலக்கம் வேண்டாம்! உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “வினாத்தாள் கசிவு” வதந்திகளுக்குப் பரீட்சை திணைக்களம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அவசர விளக்கமளித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் இதுதான்— அம்பலாங்கொடை பகுதியிலுள்ள உயர்தரப் பரீட்சை மையம் ஒன்றில், இன்றைய தினம் (14) நடைபெறவிருந்த ‘பௌதிகவியல் முதலாவது வினாத்தாள்’ அடங்கிய 6 பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் காணப்பட்டதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிந்துவிட்டதாகத் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின.
இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம், எந்தவொரு வினாத்தாள் பொதியும் எந்தவொரு நிலையிலும் சட்டவிரோதமாகத் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையங்களில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படவோ இல்லை என்பதைத் தீர்க்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, இணைய வழியில் பரப்பப்படும் போலித் தகவல்களைக் கண்டு மாணவர்கள் எவ்வித அச்சமும் அடை தேவையில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்துரைக்கப்பட்ட கால அட்டவணையின்படி நாட்டின் அனைத்து மையங்களிலும் பரீட்சைகள் தடையின்றி நடைபெறும் என்பதால், பரீட்சார்த்திகள் அனைவரும் எவ்வித பதற்றமும் இன்றி உரிய நேரத்திற்குப் பரீட்சை மையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோன்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


