ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. சரித்த ஹேரத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்டோர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான, (CoPE) கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த மார்ச் 07ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ள சரித்த ஹேரத், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எஸ்.எம். மரிக்கார் எம்.பி தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள அவர்,
இலங்கையின் அரச நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் குழுவின் தலைவர் பதவிக்கு பொருத்தமற்ற ஒருவரை நியமித்தமை போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், இன்று முதல் கோப் குழுவிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நான் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்தேன், ஏனெனில் அது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்ல, மாறாக அது ரோஹித அபேகுணவர்தனவை தலைவராக கொண்ட மொட்டு எண்டர்பிரைஸ் குழுவாகும்.
தமது இராஜினாமா குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, நளின் பண்டார, இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், நேற்றையதினம் (18) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன விலகிய நிலையில், இன்றையதினம் விலகிய தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்ட 8 பேர் இதுவரை கோப் குழுவிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.