எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் பூரண ஆசாரணையில் இயங்கிவரும் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 16.02.2025 மன்னார் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து எனும் தொனிப்பொருளுக்கு அமைய, சிறார்களின் கல்விக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் (சுங்கத் திணைக்கள பிரதி அத்தியட்சகர்) தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் குறித்த பாலர் பாடசாலை, சகல வசதிகளுடன்கூடிய, தேசிய தரத்திலான முன்மாதிரி பாலர் பாடசாலையாக உருவாகவேண்டும் என்ற அடிப்படையில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் அவர்களின் குடும்பத்தில் மரணித்த மர்ஹூம்களின் நினைவாக, குறித்த முன்பள்ளியின் நான்காவது வகுப்பறைக்கான புதிய கட்டிடம், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் மற்றும் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் ஆகியோர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் அதிகமான சிறார்கள் கல்விகற்று வரும் இப்பாலர் பாடசாலையில், விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டு உபகரணங்களும், கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு இன்றைய நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் நிலையான தர்மத்தின் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் இருநூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.


இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் எதிர்கால திட்டம், கல்லூரியின் அபிவிருத்திக்கான மூலோபாயங்கள் குறித்த விஷேட கலந்துரையாடலிலும் பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் கலந்து சிறப்பித்தார்.
A.Baur & Co.(Pvt.) Ltd. நிறுவனத்தின் இறக்குமதி முகாமையாளர் திரு. ரவிச்சந்திரன் குறித்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்டதுடன், 75 மாணவர்களுக்கான சுமார் 50 லட்சம் பெறுமதியுடைய தளபாட உபகரணங்களையும் வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.


மேலும் சின்னஞ் சிறார்களின் மேடை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன், வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் விஷேட வழிகாட்டல் சொற்பொழிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


குறித்த நிகழ்வில் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஷஹாப்தீன் குடும்பத்தினர்கள், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் அதிபர், முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





