புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட நாகவில்லு, எருக்கலம்பிட்டி கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மிகத் துரிதமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹின் ரீஷா அவர்களின் நேரடி வழிகாட்டலில், அப்பகுதியில் பழுதடைந்திருந்த வீதி மின்விளக்குகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வடிகான் துப்பரவுப் பணிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருளை விரட்டிய 35 மின்விளக்குகள்!
எருக்கலம்பிட்டி கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள சுமார் 35 வீதி மின்விளக்குகள் பழுதடைந்திருந்ததன் காரணமாக, இரவு வேளைகளில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக, இப்பகுதிகளில் இருளைப் பயன்படுத்தி சில இளைஞர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். அத்துடன், பொதுமக்கள் இரவு வேளையில் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலையும் காணப்பட்டது.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு, கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்தப்பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் தியாகத் திருநாளான ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் இத்திருத்தப்பணி மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீஷா எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பதாகவும், ஜனாப் ஷாஹீன் ரீஸாவின் வழிகாட்டலில் இப்பகுதியின் குறுக்கு வீதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
பருவமழைக்கு முன் அதிரடி: பெகோ இயந்திரம் மூலம் வடிகான்கள் துப்பரவு!
இதேவேளை தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையினை அடுத்து, கிராமத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மற்றொரு பாரிய வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்கள் புத்தளம் பிரதேச சபை தலைவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச சபைத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மருங்கில் உள்ள வீதியோர வடிகான்கள் மற்றும் கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள வடிகான்கள் ‘பெகோ’ இயந்திரங்கள் மூலம் வடிகான்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் திட்டுக்கள் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன.
மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியும் நன்றியும்!
எருக்கலம்பிட்டி கிராமத்தின் ‘C’ பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறானதொரு முறையான வடிகான் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் இப்பகுதியில் வழக்கமாக ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களின் தேவைகளை உணர்ந்து, பண்டிகைக் காலத்திலும், மழைக்காலத்திலும் மிகத் துரிதமாகச் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸாவிற்கு எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.










