- அதிர்ச்சி தரும் தேர்தல் களம்: நெதன்யாகுவுக்கு எதிராகத் திரளும் வாக்குகள்!
- 1977-க்குப் பின் வரலாறு காணாத வாக்குப்பதிவு: பதற்றத்தில் இஸ்ரேல் பிரதமர்!
- “அவசர நிலை!” — வாக்காளர்களைப் பதறியடித்து அழைக்கும் நெதன்யாகு: பின்னணி என்ன?
அல்ஜசீரா: 2023 அக்டோபரில் காசா நிலப்பரப்பு மீது முன்னெடுக்கப்பட்ட கொடூரப் போர் மற்றும் இனப்படுகொலைத் தாக்குதல்களுக்குப் பின்னர், இஸ்ரேல் தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான மிகத் தீர்க்கமான பொதுத்தேர்தலை இன்று எதிர்கொண்டுள்ளது. 120 ஆசனங்களைக் கொண்ட நெசெட் (Knesset) மன்றத்தைக் கைப்பற்ற, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கூட்டணிக்கும், முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
வாக்களிப்பு ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே வாக்குச்சாவடிகளை நோக்கி இளைய தலைமுறையினர் சாரை சாரையாகப் படையெடுத்து வருகின்றனர். நண்பகல் வரையான காலப்பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 31 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் ஐந்து மணித்தியாலங்களில் பதிவான மிக உயர்ந்த வாக்கு வீதம் இதுவெனத் தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், மக்கள் மத்தியில் நெதன்யாகுவின் நீண்டகால ஆட்சி மீதான அதிருப்தியே இந்த பாரிய அலைக்குக் காரணம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்குச்சாவடிகளில் இடதுசாரி ஆதரவாளர்களின் எழுச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் நெதன்யாகு, சமூக வலைத்தளமான X தளத்தில் அவசரப் பதிவொன்றை இட்டுள்ளார். “அவசர நிலை! இடதுசாரி ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு வருகின்றனர்; ஆனால் வலதுசாரிகளோ மௌனம் காக்கின்றனர். உடனே விழித்தெழுந்து லிகுட் கட்சிக்கு வாக்களியுங்கள்!” எனத் தனது ஆதரவாளர்களைக் கெஞ்சும் தொனியில் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பணப் பைகளுடன் வாக்குக்குப் பணம் கொடுக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மறுபுறம், தேர்தல் களம் இத்தனை பரபரப்பாக நகர்ந்தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் முற்றுகையிடப்பட்ட காசாவில் வாழும் கோடிக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்குத் தங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அறவே மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட ஐந்தில் ஒரு பங்கினரான அரபு மக்கள், தங்களுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறைகள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் தங்களின் இருப்பைப் பதிவுசெய்யும் நோக்கில் பெரும் போராட்டத்துடன் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
பாதுகாப்புப் புலனாய்வுத் தோல்விகள், பிணைக்கைதிகள் விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் ஊழல் வழக்குகளால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நெதன்யாகு, இம்முறை ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது பல தசாப்த கால அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருமா என்பது சில மணிநேரங்களில் வெளியாகவுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் மூலம் வெட்டவெளிச்சமாகவுள்ளது.




