பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக எம்பி அர்ச்சுனா அமர்ந்திருக்கும் போதே, அவரை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் எப்படி பிடியாணை (வோரண்ட்) பிறப்பிக்க முடியும்? – இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்த முக்கிய கேள்வி இதுதான். எதிர்க்கட்சி எம்பி கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த அடுத்த கணமே, சபைக்குள் இருந்த அமைதி காற்றில் பறந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு கூச்சலிட, பாராளுமன்றமே அனல் பறக்கும் களமான மாறியது.
“நீதிமன்றம் அப்புறம்… முதல்ல இந்த சபைதான்!” – சஜித் பிரேமதாச ஆவேசம்!
சபையில் நிலவிய பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. “அர்ச்சுனா இந்தச் சபையில் கலந்து கொள்வது அவருடைய சிறப்புரிமை! அவர் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. அவருடைய கடமையைச் செய்வதை எந்தவொரு நிறுவனத்தாலும் தடுக்க முடியாது!” என முழங்கினார்.
அத்துடன் நிறுத்தாமல் பிரதி சபாநாயகரை நோக்கி, “மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பியின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் உடனடியாக ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்! இது விஷயத்தில் சபாநாயகரிடம் கேட்கத் தேவையில்லை, அவருக்கு இருக்கும் அதிகாரம் நீதிமன்றத்தில் இல்லை, இந்தச் சபையில்தான் இருக்கிறது!” எனக் குரலை உயர்த்தினார்.
“என்னால் முடியாது…” – பிரதி சபாநாயகரின் கைகழுவல்!
எதிர்க்கட்சியினரின் இந்த அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, நிலைமையைச் சமாளிக்க முயன்றார். இருப்பினும், சஜித்தின் நேரடிக் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் உடனடியாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவிக்க, எதிர்க்கட்சியினரின் கோபம் இரட்டிப்பானது.
இதேவேளை, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கப் புயலாகக் களமிறங்கினார் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல. “எந்தவொரு சிவில் குற்றவியல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் ஆக வேண்டும். வழக்கறிஞர் மட்டும் போனால் போதாது!” என வெட்டிப் பேசினார்.
மேலும், “எம்பி நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலை இருந்தால், அவருடைய பிணையாளியாவது சென்று நீதிமன்றத்தில் நிலைமையை விளக்கியிருக்க வேண்டும். அதை விடுத்துச் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது” என நியாயம் கற்பிக்க, சபையில் காரசாரமான வாக்குவாதங்கள் தொடர்ந்தன.
நீதிமன்ற உத்தரவா? பாராளுமன்ற சிறப்புரிமையா? எது ஜெயிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.


