நீதித்துறை அமைப்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சில சர்ச்சைக்குரிய நகர்வுகள் குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
அந்தவகையில் இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு காரசாரமாக உரையாற்றிய ரவூப் ஹக்கீமின் பேச்சு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஜே.வி.பி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது, அவர்களுக்காகத் தோன்றிப் போராடிய சட்டத்தரணி நீலாரத்னவின் தியாகங்களைச் சுட்டிக்காட்டிய ஹக்கீம், தற்போதைய அரசாங்கம் வரலாற்றை மறந்து நீதித்துறையின் அழுத்தங்களுக்குச் செவிசாய்க்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
“பொறுப்பற்ற மௌனம்” – அரசைக் கிழித்தெறிந்த குற்றச்சாட்டு!
முக்கியமான தருணங்களில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே மக்கள் தகவல்களைப் பெற வேண்டிய நிலை உள்ளது என்றும், 24 முதல் 48 மணிநேரம் வரை பொறுப்பான அமைச்சர்கள் எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது கடமை தவறிய செயலாகும் என்றும் தெரிவித்த ஹக்கீம், இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய ஹக்கீம்,
சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி, நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட பின்னரே அமைச்சு தரப்பு விளக்கமளிக்க முன்வருவது, அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பதையே காட்டுகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திடீரென உயர்த்துவது என்பது, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெறக் காத்திருக்கும் ஜூனியர் நீதிபதிகளின் நியாயமான எதிர்பார்ப்புகளை முடக்கும் செயலாகும். இது நீதித்துறை கட்டமைப்புக்குள்ளேயே பெரும் குழப்பத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டத்திருத்தங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தாமல், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் பிறகே அமலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
பிரதம நீதியரசர்கள் ஓய்வுபெற்ற உடனடியாக, அவர்களுக்கு நியூயோர்க் போன்ற முக்கிய நகரங்களில் நிரந்தர தூதரகப் பிரதிநிதித்துவ உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நடைமுறை தொடர்கிறது.
முந்தைய அரசாங்கங்கள் முதல் தற்போதைய ஆட்சி வரை தொடரும் இந்த “பரிசளிக்கும் கலாச்சாரம்”, நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது என்றும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் ஹக்கீம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


