செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் (Base Hospital) இயங்கி வந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) கட்டடப் பகுதி ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததை அடுத்து, அந்தப் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
வைத்தியசாலையின் பழைய கட்டடம் ஒன்றில் 06 படுக்கை வசதிகளுடன் இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வந்தது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, குறித்த கட்டடத்தின் கொன்கிரீட் கூரைப் பகுதி ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நான்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த இடிபாடுகளினால் நோயாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளனர்:
அந்தவகையில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், மற்றுமொருவர் கல்கமுவ மகா வைத்தியசாலைக்கும் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கிய கட்டடம் மிகவும் பழமையானது என்றும், அதன் ஆபத்தான நிலை குறித்து ஏற்கனவே சுகாதார அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலைக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் லசந்த லியனகே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் ஆலோசனைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





