உலக வர்த்தக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெரும் புயலைக் கிளப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் கட்டாயத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலைத் தடுக்கத் தவறிய நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வியாழக்கிழமை புதிய கூடுதல் இறக்குமதி வரிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடிப் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சாதாரணமானதல்ல. சர்வதேச சந்தைக்குள் கட்டாயத் தொழிலாளர்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் பொருட்கள் நுழைவதைத் தடுப்பதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத 60 உலகப் பொருளாதாரங்களை ஆராய்ந்து, அவற்றின் மீது 10% முதல் 12.5% வரையிலான கூடுதல் வரிகளை வாஷிங்டன் சுமத்தியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதில் ஒரு சிறிய நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி என்னவென்றால், இலங்கை மிக மோசமான 12.5% வரிப் பிரிவுக்குப் பதிலாக, குறைந்தபட்ச வரியான 10% பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் போலவே இந்தியா, பிரித்தானியா, கனடா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், மலேசியா, கம்போடியா உள்ளிட்ட 17 நாடுகள் மட்டுமே இந்த 10 சதவீத வரிச் சலுகை வரம்பிற்குள் தப்பியுள்ளன. கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதித்த, அல்லது பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அத்தகைய தடைகளை அமல்படுத்த உறுதியளித்த, அல்லது பகுதி வரம்புகளை நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளுக்கே இந்த 10% வரி விதிக்கப்படுவதாக USTR விளக்கமளித்துள்ளது.
அதேவேளை, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நாடுகள் 12.5% என்ற கடினமான வரியைச் சந்திக்கவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய வல்லரசு நாடுகளின் பொருட்கள் கூட, ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரிகளுக்கு மேலதிகமாக 10% அல்லது 12.5% கூடுதல் வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதலே நடைமுறைக்கு வரும் இந்த வரியானது சர்வதேச வர்த்தகச் சூழலில் புதியதொரு மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
“பத்தாண்டு காலமாக சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியிலிருந்து கட்டாயத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாமல் போய்விட்டது” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள USTR தூதர் ஜேமிசன் கிரீர், அமெரிக்காவைப் போல் ஏனைய வர்த்தகப் பங்காளிகளும் கடுமையான தடைச் சட்டங்களை இயற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 1974 ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், 45 க்கும் மேற்பட்ட அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1,600 க்கும் மேற்பட்ட பொதுப் மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த இறுதி வரி விகிதங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆரம்பத்தில் 12.5% அதிக வரி விதிக்கப்படவிருந்த இந்தியா, வாஷிங்டனுடன் நடத்திய ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் பலனாகத் தனது வரியை 10% ஆகக் குறைத்துக் கொண்டுள்ளது. அத்துடன், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான விவகாரத்தில் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட 25% வரியையும் ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


