யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மீண்டும் ஒருமுறை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41 ஆவது நாளான நேற்று (23), வழக்கமான அகழ்வுப் பணிகளையும் தாண்டி, அனைவரையும் உரைய வைக்கும் வகையிலான அதிர்ச்சி உண்மைகள் சில நிலத்தடி மண்ணுக்குள்ளிருந்து வெளிவந்துள்ளன.
நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 9 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மூன்று இடப் பகுதிகளில் எலும்புக் குவியல்களும், சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் ஆணிகள் மற்றும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கிருந்த அனைவரையும் உற்றுநோக்க வைத்தது வேறு ஒரு காட்சி!
அடையாளம் காணப்பட்ட 467 ஆவது எலும்புக்கூடு, இதுவரை கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. மழைக்காலத்தில் அணியும் மழை அங்கி (Raincoat) மற்றும் காலின் பகுதியில் காலுறை (Socks) அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இடத்தில் சவப்பெட்டி ஒன்று பயன்பாட்டில் இருந்ததற்கான தடயங்களும் காணப்படுகின்றன.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், “இந்த எலும்புக்கூடு அமைந்திருக்கும் விதம் பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்ட ஒன்றா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் இது குறித்து விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மேலதிக விவரங்கள் விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரை மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதில் 464 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அகழ அகழ வெளிவரும் மனித எச்சங்கள், நிலத்தடியில் புதைந்து கிடக்கும் மர்மங்களை நோக்கி நாட்டையே உற்றுநோக்க வைத்துள்ளது.


