- உடப்புவை விழுங்கும் கடல்: தப்பியோடும் மீனவர்கள், தரைமட்டமாகும் வாடிகள்!
- திசைமாறிப் பாயும் பேரலைகள்: சிலாபத்தில் அடுத்தடுத்து கடலுக்குள் மூழ்கும் வீதிகள்!
- கற்கள் போட்டாச்சு… ஆனா கடல் நிக்கல! உடப்புவில் 700 மீற்றர் ஆபத்து வளையம்!
ஜுட் சமந்த
சிலாபம், உடப்பு கடலோரப் பகுதி மீண்டும் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு இலக்காகியுள்ளது. வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷத்துடன் எழும் பேரலைகள் கரையோரத்தை வேகமாக அரித்துச் செல்லத் தொடங்கியுள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பல மீனவ வாடிகளை கடலுக்குள் இழுத்துச் சென்று நிர்மூலமாக்கியுள்ளன.
பல வருடங்களாகத் தொடரும் இந்த அவலத்திற்குத் தீர்வாக அமைக்கப்பட்ட தடுப்புக் கருங்கல் அணைகளையும் மீறி அலைகள் உள்நுழைவதுதான் தற்போது அங்குள்ளவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, மேற்கு கரையோரப் பகுதிகளில் வழக்கமாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே கடலரிப்பு நகரும்; ஆனால், இம்முறை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அரிப்பு நகர்வது இயற்கையின் புதிரான மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த விசித்திரமான அலைகளின் தாக்கத்தால் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த பல வாடிகள் விரிசல்கண்டு, எந்த வினாடியிலும் இடிந்து கடலில் விழும் அபாயத்தில் தத்தளிக்கின்றன. இதனால் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியும் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தை விளக்கிய ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் என்.கமலேஸ்வரன், உடப்பு பிரதான பாலத்தை அண்டிய 200 மீற்றர் பகுதியை கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் துரிதமாகப் பாதுகாத்ததற்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், அடுத்தடுத்த ஆபத்துகள் மிக வேகமாக மக்களை நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கடல் முன்னேறி வருவது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை நோக்கியே என எச்சரித்துள்ள அவர், சுமார் 700 மீற்றர் நிலப்பரப்புக்குள் கடலோர வீதியும் மீனவ வாடிகளும் ஏற்கனவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் எஞ்சிய வாடிகளும் கடலுக்குள் இழுக்கப்படலாம் என்பதால், எஞ்சியிருக்கும் பகுதியையாவது உடனடியாகக் கருங்கற்கள் கொண்டு பாதுகாக்கத் தவறினால், ஒரு ஒட்டுமொத்தக் கிராமமே கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





