- உலக சாதனையுடன் நாடு திரும்பிய இலங்கையின் பலசாலி: வென்னப்புவவில் திரண்ட மக்கள்!
- கிர்கிஸ்தானில் அதிர்ந்த அரங்கு: தங்கப் பதக்கத்துடன் ஊர் திரும்பிய விமானப்படை வீரர் துலீப் மதுசங்க!
- 95 கிலோ பிரிவில் புதிய உலக சாதனை: தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய தங்க மகன்!
ஜுட் சமந்த
சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கை மூவர்ணக் கொடியை உலக சாதனையுடன் பட்டொளி வீசிப் பறக்கச் செய்து, தாய்நாட்டிற்கு மாபெரும் கௌரவத்தைத் தேடித்தந்துள்ளார் இலங்கை விமானப்படை வீரர் துலீப் மதுசங்க.
கிர்கிஸ்தானில் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச ஸ்ரென்த்லிஃப்டிங் (Strengthlifting) போட்டியில், உலகெங்கிலுமிருந்து பலம்பொருந்திய வீரர்கள் களம் கண்டனர். இதில் 95 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய துலீப் மதுசங்க, சக போட்டியாளர்களைப் பின்தள்ளி, புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார்.
இந்த மகத்தான சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய தங்க மகனுக்கு வென்னப்புவ – தோப்புவ சந்தியில் மக்கள் திரண்டு உணர்வுப்பூர்வமான வரவேற்பை வழங்கினர்.
தங்கோட்டுவ – மொஹொட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளம் சாதனையாளரை, கிராமத்து இளைஞர்களும் ஊர் மக்களும் ஒன்றுதிரண்டு வாழ்த்து கோஷங்களுடன் வரவேற்றதுடன், அங்கிருந்து திறந்த வாகனப் பேரணி மூலம் அவரது சொந்த கிராமத்திற்குப் பெருமையுடன் அழைத்துச் சென்றனர்.



