அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்காக பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களைக் கொண்ட இந்திய டெஸட் குழாத்தில் அஜின்கியா ரஹானேயும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக ரோஹித் ஷர்மா தொடர்ந்து பதவி வகிக்கவுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடைந்த 3 போட்டிகள் கொண்ட தொடரிலேயே ரஹானே கடைசியாக விளையாடியிருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் ரஹானே 6 இன்னிங்ஸ்களில் 136 ஓட்டங்களையே மொத்தமாக பெற்றிருந்தார்.
ஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக துடுப்பாட்டத்தில் ரஹானே அசத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்திய தெரிவாளர்கள் அவரை மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
பொதுவாக பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடும் வழக்கத்தைக் கொண்ட ரஹானே, நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் அதிரடி ஆட்டக்காட்டக்காரராக தன்னை மாற்றிக்கொண்டு ஓட்டங்களை மிக வேகமாக குவித்துவருகிறார்.
இந்த வருடம் விளையாடிய 5 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 209 ஓட்டங்களைக் குவித்துள்ள ரஹானேயின் ஸ்ட்ரைக் ரேட் 199 ஆகும்.
82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 12 சதங்கள், 25 அரைச் சதங்களுடன் 4931 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய இருபது 20 அதிரடி துடுப்பாட்ட வீரர் சூரியகுமார் யாதவ் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கருத்தில் கொள்ளப்படவில்லை.
அத்துடன் அந்தத் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த கே.எல். ராகுல் மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதையிலிருந்து பூரணமாக மீளாததாலும் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கி இன்னும் பூரண ஆரோக்கியம் பெறாததாலும் டெஸ்ட் அணியில் அவர்கள் இருவரும் இணைக்கப்படவில்லை.
இந்திய டெஸ்ட் குழாம்
ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரஹானே, கே. எல். ராகுல், கே.எஸ். பாரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஷர்துல் தக்கூர், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜய்தேவ் உனத்கட.