ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் 26 நாள்களாக மெத்தையிலேயே படுத்துள்ளனர்.
மாண்டெனெக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 21 பேர் இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
சுமார் 26 நாள்கள் 463 மணிநேரம் கடந்துள்ள நிலையில், தற்போது 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் நீடித்து வருகின்றனர்.
இந்த போட்டியை பொறுத்தவரை 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. தவறுதலாக படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி உணவு உண்பதெல்லாம் படுத்துக் கொண்டுதான். படுத்துக் கொண்டே செல்போன் மற்றும் லேப்டாப் உபயோகிக்கவும், புத்தகங்கள் படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கடைசி வரை படுத்து வெற்றி பெறுபவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் ரூ.88,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும், படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்தாண்டு நடைபெற்ற இந்த போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இந்தாண்டு இன்னும் 7 பேர் வெற்றிக்காக போராடி கொண்டுள்ளனர்.