Sponsored Advertisement
HomeSportsஐ.பி.எல். வரலாற்றில் யஷஸ்வி ஜய்ஸ்வால் சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் யஷஸ்வி ஜய்ஸ்வால் சாதனை

கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் 50 ஓட்டங்களை பூர்த்தி செய்த ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைச் சதத்தைப் பெற்று சாதனை நிலைநாட்டினார்.

அப்போட்டியில் 41 பந்துகள் மீதம் இருக்க, ராஜஸ்தான் றோயல்ஸ் மிக இலகுவாக 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜய்ஸ்வாலின் சாதனைமிகு முதல் 50 ஓட்டங்களில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கின.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைச் சதம் குவித்த கே.எல். ராகுல், பெட் கமின்ஸ் ஆகியோரின் அதிவேக இணை சாதனையை ஜய்ஸ்வால் முறியடித்தார்.

சிறு பிராயத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கும் பொருட்டு மும்பைக்கு சென்று பசி, பட்டினியுடன் ஒரு கூடாரத்தில் வாழ்ந்து சிறுக சிறுக கிரிக்கெட்டில் முன்னேறிய ஜய்ஸ்வால், கொல்கத்தா அணித் தலைவர் நிட்டிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 2007இல் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ணத்தில் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் குவித்த 50 ஓட்ட உலக சாதனையை ஜய்ஸ்வால் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை சமப்படுத்த ஒரு பந்தினால் அவர் தவறினார்.

21 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான ஜய்ஸ்வால் இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை 2 ஓட்டங்களால் பெறத் தவறினார். நிகர ஓட்ட வேகத்தை குறியாகக் கொண்டு மறு பக்கத்தில் அணித் தலைவர் சஞ்சு செம்சன் சிக்ஸ்கள் மூலம் ஓட்டங்களைக் குவித்ததால் சதம் குவிக்கும் வாய்ப்பு ஜய்ஸ்வாலுக்கு கிடைக்கவில்லை.

அவர் 94 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வெற்றிக்கு 3 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால், வெற்றி ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றதால் ஜய்ஸ்வால் 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 47 பந்துகளில் பெறப்பட்ட அந்த ஓட்டங்களில் 12 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன.

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஜய்ஸ்வாலும் சஞ்சு செம்சனும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

சஞ்சு செம்சன் 29 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

“நான் எப்போதும் சிறப்பாக தயார்ப்படுத்திக்கொண்டு விளையாடுவேன். எனது அடிகளை கச்சிதமாக செயற்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். சாதகமான முடிவு வரும் என்பதை அறிந்திருந்தேன். போட்டியை வெற்றியுடன் முடிக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ராஜஸ்தானின் நிகர ஓட்ட வேகத்தை மாத்திரமே நான் சிந்தித்தேன். எனது சதத்தை அல்ல” என போட்டி முடிவில் ஜய்ஸ்வால் கூறினார்.

அவர் கூறியது போல் இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் சிறந்த நிகர ஓட்ட வேக அடிப்படையில் ராஜஸ்தான் றோயல்ஸ் 3ஆம் இடத்தை அடைந்துள்ளது.

முன்னதாக அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முதல் 6 பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்ற போதிலும், இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

வெங்கடேஷ் ஐயர் 57 ஓட்டங்களையும், நிட்டிஷ் ராணா 22 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Exit mobile version