நீங்கள் வீதியில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, திடீரென புதருக்குப் பின்னாலிருந்தோ அல்லது மரத்தின் மறைவிலிருந்தோ ஒரு பொலிஸ் அதிகாரி பாய்ந்து வந்து உங்கள் வாகனத்தை மறித்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? இனி அப்படிச் செய்யவே முடியாது!
போக்குவரத்துக் குற்றங்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் வீதியில் செல்லும் ஏனைய மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், மிகவும் வெளிப்படையாகவும் தொழில்முறையுடனும் மட்டுமே செயற்பட வேண்டும் என்றும், மறைவிடங்களிலோ அல்லது புதர்களுக்குப் பின்னாலோ ஒளிந்திருந்து வாகனங்களை மறிக்கக் கூடாது என்றும் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆனால், இந்த உத்தரவுக்குப் பின்னால் சமூக வலைத்தளங்களை உலுக்கிய ஒரு பரபரப்பான சம்பவம் ஒளிந்திருக்கிறது!
சமீபத்தில் தம்புள்ளை அதிவேகப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி உடனடியாகப் போக்குவரத்து கடமைகளிலிருந்து நீக்கப்பட்டு வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே, அனைத்துப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் திணைக்களச் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை DIG சேனாதீர நினைவுபடுத்தியுள்ளார்.
“பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தவோ அல்லது சாரதிகளிடம் பணம் பறிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிச் சோதனைகளை நடத்தவோ கூடாது. பஸ் நிறுத்துமிடம் அல்லது பொதுமக்கள் பார்க்கும் வகையிலான வெளிப்படையான இடங்களில் மட்டுமே வாகனங்களை மறிக்க வேண்டும். தேவைப்பட்டால், பொலிஸ் அடையாளமும் நோக்கமும் தெளிவாகத் தெரியும் வகையில் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்லலாம்” என அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், சாரதிகளுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்: பொலிஸ் அதிகாரிகளிடம் வீதியில் வைத்து நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை! தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அஞ்சல் நிலையங்கள் போன்ற வழிகள் மூலமாகவே தண்டப் பணத்தை (Fine) செலுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையை மீறி வீதியில் வைத்து பொலிஸாருக்குக் கொடுக்கப்படும் பணம் ‘லஞ்சமாகக்’ கருதப்பட்டு, கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். “எந்தவொரு சூழ்நிலையிலும் லஞ்சம் கேட்கவோ அல்லது பெறவோ பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமையில்லை. நேர்மையாகக் கடமையாற்றும் பெரும்பான்மையான பொலிஸாரின் பெயரைக் கெடுக்கும் வகையில் ஒரு சிலர் நடப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் மிகக் கடுமையான ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கையாளும் என்றும் DIG சேனாதீர அழுத்தமாகக் கூறியுள்ளார்.


