மத்திய கிழக்கு போர்க்கள நிலவரம்: சூடுபிடிக்கும் அமெரிக்க-ஈரான் மோதல்; கடலில் சிக்கும் போர் வீரர்கள்!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு எரிபொருள் விலையை ஸ்திரமாக வைத்திருப்பதும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அடியோடு தடுப்பதுமே தங்களது பிரதான நோக்கம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், வரலாறு இதுவரை கண்டிராத வகையிலான கடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரான் மீது திணிக்கப்படவுள்ளதாக அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட் எச்சரித்துள்ளார்.
ஆனால், கள நிலவரம் சர்வதேச வர்த்தகப் பாதையை ஸ்தம்பிக்க வைக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஹோமுஸ் ஜலசந்தியில் அமெரிக்கா காலவரையறையற்ற முற்றுகையை முன்னெடுக்க முடியும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறினாலும், ஈரானின் நேரடி அனுமதி பெறாமல் எந்தவொரு கப்பலும் இந்தப் பாதையைக் கடக்க முடியாது என அந்நாட்டு இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், அங்கு தினசரி கப்பல் போக்குவரத்து பாரிய சரிவைச் சந்தித்துள்ளதுடன், மாற்றுப் பாதையான பாப் அல்-மந்தேப் ஊடான பயணங்களும் பதற்றத்துடனேயே தொடர்கின்றன.
இதற்கிடையே, ஓமானின் கடல்சார் சரணாலயப் பகுதிக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ரஷ்ய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கரையோரங்களை அடைந்து பெரும் சூழலியல் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வான் பரப்பிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈராக்கின் எர்பில் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீழ்ந்துள்ளன. தெற்கு லெபனானின் காப்ரா பகுதியிலும் இஸ்ரேலிய ட்ரோன் குண்டுவீச்சுத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இருப்பினும், இந்தப் போர் தீவிரத்தின் மறுபக்கத்தில் அமெரிக்காவின் சொந்தப் படைகளே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வொஷிங்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள ‘USS ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், எந்தவொரு துறைமுக தரிப்பும் இன்றி தொடர்ந்து 7 மாதங்களுக்கும் மேலாகக் கடலிலேயே நிலைகொண்டுள்ளது. தொடர்பு முடக்கம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தாக்குதல் அச்சம் காரணமாக சில மாலுமிகள் கப்பலிலிருந்து கடலில் குதிக்க முயன்ற அதிர்ச்சித் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் புளூமெந்தால் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலப் போர்க்காலக் கடற்பயணம் கப்பலின் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதுடன், வீரர்களின் மன உறுதியையும் வெகுவாகப் பாதிக்கும் என மூத்த கடற்படை ஆய்வாளர் ஹார்லன் உல்மேன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும், காசா விவகாரம் தொடர்பான முக்கிய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்காக டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் டோனி பிளேயர் ஆகியோர் அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் எகிப்திற்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


