இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை தான் வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என டயனா கமகே யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
எனினும் அந்த விடயம் நாட்டில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்போது கஞ்சா பயிரிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 07 பேருக்கு அனுமதிவழங்கி, தான் அன்று முன்வைத்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் டயனா கமகே தெரிவித்தார்.
அத்துடன், முன்னதாக இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த விஜித ஹேரத் உள்ளிட்டோர் தற்போது அமைச்சரவையில் இதற்கு அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலக நாடுகளில் இவ்வாறான விடயங்கள் நடைமுறையில் இருப்பதால் அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. ஆகவே இலங்கையிலும் அவற்றை முன்னெடுக்கும் போதே பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டினார்.
இதனை தற்போதாவது புரிந்துகொண்டு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கசினோவுக்கும் தற்போது இலங்கையில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் டயனா கமகே கூறினார்.
இந்த நிலையில் தான் முன்வைத்த கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கான தூங்கா நகரத் திட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்தினால் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிறந்த முதலீட்டாளரைக் கொண்டு ஜனாதிபதி மாளிகையை அபிவிருத்தி செய்து ஜனாதிபதி ஹோட்டல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.