கடல் எல்லைகளைத் தாண்டி இலங்கைக்குள் ஊடுருவும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பாரிய சூழ்ச்சியொன்றை கற்பிட்டி போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். கற்பிட்டி, ஜணசவிபுர பகுதியில் நேற்று (ஜூலை 19) மாலை முன்னெடுக்கப்பட்ட இரகசிய தேடுதல் வேட்டையின் போது, சர்வதேச கடல்வழியாகக் கொண்டு வரப்பட்ட பெரும் தொகையான போதை மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முக்கிய சந்தேகநபர் ஒருவரும் வலையமைப்பில் சிக்கியுள்ளார்.
இளைஞர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படும் ‘P Cap’ வகையைச் சேர்ந்த, ‘டபா’ (Taba) என்று அழைக்கப்படும் 67,330 போதை மாத்திரைகள் இதன்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றும் தலா 200 ரூபாய் என்ற அதிக விலைக்கு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
போதை மாத்திரைகள் மட்டுமன்றி, கடத்தல்காரர்களின் மற்றுமொரு ரகசியத் திட்டமும் இந்த சோதனையில் அம்பலமாகியுள்ளது. சந்தேகநபரின் வீட்டைப் போலீசார் சல்லடை போட்டுத் தேடியபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் எடையுடைய பீடி இலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பீடி இலைத் தொகுதியினை நாட்டின் வேறொரு பகுதிக்கு அவசரமாகக் கடத்துவதற்குத் தயாரான நிலையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் பீடி இலைகளையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டநடவடிக்கைகளை போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கற்பிட்டி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி உற்பட அதிகாரிக் குழுவினர் இந்த வெற்றிகரமான அதிரடிச் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜுட் சமந்த


