வடமேற்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடத்தல்காரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் பாரிய முறியடிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கற்பிட்டி, பத்தலங்குண்டுவ கல்லாறு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம மூட்டைகளை மீட்டதன் மூலம் இந்த பாரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘விஜய’ கடற்படை முகாமின் அதிகாரிகள் அப்பகுதியில் வழக்கமான ரோந்து மற்றும் விசேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான், நடுக்கடலில் அலைகளுக்கு நடுவே சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து கொண்டிருந்த அந்தப் பாரிய பொதிகள் கடற்படையினரின் கண்காணிப்பில் சிக்கின.
சந்தேகத்தின் பேரில் உடனடியாக அப் பகுதிக்கு விரைந்த கடற்படையினர், கடலில் மிதந்த 26 பெரிய மூட்டைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்த மூட்டைகளைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது;
அவற்றுக்குள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட 1,270 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடற்படையினரின் தீவிர ரோந்துப் பணிகளை தூரத்திலிருந்தே அவதானித்த கடத்தல்காரர்கள், பிடிபடுவதில் இருந்து தப்புவதற்காக இந்த பெறுமதிமிக்க சரக்குகளை நடுக்கடலிலேயே வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த பெருந்தொகையான பீடி இலைகள் அனைத்தும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் கடத்தல்காரர்களைக் கண்டறியும் விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



