இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான்களாக வலம் வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களையே அணியை விட்டு வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். இவரது தேர்வின் கீழ் அணித் தேர்வில் பல அதிர்ச்சிகளைச் சந்தித்தாலும், இந்திய அணி வரலாற்று வெற்றிகளையும் குவித்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராகச் செயல்பட்டு வருபவர் அஜித் அகர்கர். இவரது தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவரது பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அகர்கர் தேர்வுக் குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று அசத்தியது. இந்தத் தொடர் வெற்றிகளே அவரது பதவி நீட்டிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அகர்கர் பதவியேற்ற பிறகு இந்திய அணியில் பல கடுமையான மாற்றங்கள் அரங்கேறின. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு அணி ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் என புதிய கேப்டன்களையும் அகர்கர் துணிச்சலாக நியமித்தார்.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடைந்த அபார வெற்றிகள் அவரது தேர்வுக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளன. அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்காத இஷான் கிஷன் போன்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கித் தனது கண்டிப்பைக் காட்டிய அவர், பின்னர் அவர்கள் திறமையை நிரூபித்ததும் மீண்டும் உலகக்கோப்பை அணியில் சேர்த்து தனது நெகிழ்வுத்தன்மையையும் வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள ஆர் பி சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் என்பதால், அகர்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தொடர்ந்து அணிக்குத் தேவை என வாரியம் கருதுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அணியின் தேர்வில் எந்தவிதமான குழப்பமும் இன்றி ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் இடையே பிசிசிஐ அதிகாரிகள் அகர்கரை நேரில் சந்தித்து இந்த பதவி நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளனர். துணிச்சலான முடிவுகளுக்குக் கிடைத்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது.


