- இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) மற்றும் மான்செஸ்டர் உதைப்பந்தாட்ட அகடாமி (MSA) இணைந்து நடத்தும் ‘FFSL ஃபெடரேஷன் கிண்ணம் 2026’ கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பம்.
- அக்டோபர் 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தொடரில் உள்நாட்டின் 24 முன்னணி இளையோர் அகடமிகள் பலப்பரீட்சை.
- புத்தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாகக் களம் கண்ட எருக்கலம்பிட்டி யூத் அகடமியின் அபார முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
- இரண்டாவது போட்டியில் திருக்குமரன் அணியை சமநிலையில் நிறுத்தி எருக்கலம்பிட்டி யூத் வீரர் இர்பான் அஸ்ஜாத் ‘ஆட்டநாயகன்’ விருதை வென்று ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை உதைப்பந்தாட்ட அரங்கிற்குப் புத்துயிர் ஊட்டவும், அடுத்த தலைமுறைக்கான தேசிய நாயகர்களை அடிமட்டத்திலிருந்து அடையாளங்காணவும் கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானம் அதிரடிச் சூடுபிடித்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) வழிகாட்டலில் மான்செஸ்டர் உதைப்பந்தாட்ட அகடாமி (MSA) பெருமையுடன் முன்னெடுக்கும் இளையோர் கால்பந்து திருவிழாவான ‘FFSL ஃபெடரேஷன் கிண்ணம் 2026’ தொடரின் 3ஆவது பதிப்பு, அக்டோபர் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு முழு மூச்சாக நடைபெற்றுவருகிறது.
நாட்டின் முன்னணி அணிகளை அதிரவைக்கும் வகையில், உள்நாட்டின் 24 முன்னணி உதைப்பந்தாட்ட அகடமிகள் இத்தொடரில் சங்கமித்துள்ளன. கொழும்பு எஃப்.சி, ஜாவா லேன், சவுண்டர்ஸ், பார்சிலோனா கால்பந்து அகடாமி, கொழும்பு யூத் போன்ற உள்ளூர் ஜாம்பவான்கள் ஒருபுறமிருக்க, புத்தளத்தின் உதைப்பந்தாட்டக் கனவுகளைச் சுமந்துகொண்டு எருக்கலம்பிட்டி யூத் அகடமியும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் முதன்முறையாக இம்முறை தேசிய அரங்கில் காலடி எடுத்துவைத்தது.
உள்ளூர் திறமைகளை உரசிப்பார்ப்பதுடன் மட்டுமன்றி, இலங்கையின் பலத்தை சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு உட்படுத்த இந்தியா, மாலைதீவு, சீஷெல்ஸ் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இளையோர் அணிகளும் களம் கண்டுள்ளதால் மைதானத்தின் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இவ்வாறான சர்வதேச அனல் பறக்கும் சூழலில், புத்தளம் மாவட்டத்தின் உதைப்பந்தாட்ட ஆர்வலர்களைத் தன் பக்கம் திருப்பிய எருக்கலம்பிட்டி யூத் அணி குழுநிலை லீக் சுற்றில் களமிறங்கியது. தமது முதல் போட்டியில் ZH FOOTBALL ACADEMY அணியை எதிர்கொண்ட எருக்கலம்பிட்டி அணி, கடும் போராட்டத்திற்கு மத்தியில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றியை நழுவவிட்டது.
முதல் போட்டியின் பின்னடைவு அடுத்த போட்டிக்கான வேகத்தை பன்மடங்கு கூட்டியது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற தீர்மானமிக்க இரண்டாவது போட்டியில், பலம் வாய்ந்த திருக்குமரன் அணியுடன் எருக்கலம்பிட்டி யூத் நேருக்கு நேர் மோதியது.
கடைசி வினாடி வரை விறுவிறுப்பு குறையாமல் நீடித்த இப்போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்திய எருக்கலம்பிட்டி யூத் அகாடமி அணி, ஆட்டத்தை சமநிலையில் (Draw) முடித்துக்கொண்டது. குறிப்பாக அவ்வணி சார்பாக வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் இர்பான் அஸ்ஜாத் போட்டியின் நாயகனாக (Man of the Match) தெரிவுசெய்யப்பட்டு மைதானத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
ஒரு தோல்வி, ஒரு சமநிலை எனப் புள்ளிகள் அமைந்ததால் எருக்கலம்பிட்டி யூத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு நூலிழையில் கைநழுவிப்போன போதிலும், தேசிய மற்றும் சர்வதேச அணிகள் மோதிய உயர்மட்டக் களத்தில் புத்தளத்தின் புகழை நாடறியச் செய்த இளம் வீரர்களுக்கு எருக்கலம்பிட்டி மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்துக் கொண்டாடி வருகின்றனர்.



