பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில், 2025ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு ஆலய முன்றலில் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை மாணவர்களைக் கௌரவித்த பின்னர் உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சமூகப் பணிகளுக்காக நிதியுதவி கோரினால் பலரும் தயங்குவார்கள்;. ஆனால், ஆலயங்களுக்குத் தாராளமாக வழங்குவார்கள். எனவே, ஆலய நிர்வாகங்கள் அந்தப் பணத்தை வைத்துச் சிறந்த சமூகப் பணிகளை முன்னெடுக்க முடியும். அந்த வகையில், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது.
ஆலயங்கள் தொடர்பில் எனக்குக் கிடைக்கப்பெறும் சில முறைப்பாடுகள் கவலைக்குரியனவாக உள்ளன. பல கோடி ரூபாய்களைச் செலவிட்டு ஆலயங்களைப் புனரமைப்புச் செய்து, கும்பாபிஷேகமும் நடத்தி முடித்த பின்னர், அது தொடர்பான கணக்கறிக்கைகளை வெளியிடாத ஆலயங்கள் உள்ளன. இது குறித்து அண்மையில்கூட எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இடங்களில் ஆலய நிர்வாகங்களுக்குள் முரண்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெறுகின்றன. வழக்குகளுக்காக செலவிடும் பணத்தை, ஆலயத்தின் பெயரால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம்.
ஆனால், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் பொங்கல் நிகழ்வு முடிந்த கையோடு, தமது வருவாய் தொடர்பான முழுமையான விவரங்களை வெறும் மூன்று நாட்களுக்குள் பொதுவெளியில் சமர்ப்பித்திருந்தனர். இது ஏனைய ஆலயங்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும். இவ்வாறான வெளிப்படைத்தன்மை ஊடாக அவர்கள் மீதான மதிப்பு மேலும் அதிகரிப்பதுடன், பலரும் அவர்களை நம்பி உதவ முன்வருவார்கள்.
சமூகம் வேறு, ஆலயம் வேறு அல்ல. சமூகத்துக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும். சமூகத்தில் ஒருவன் பட்டினியாக இருக்கும்போது, ஆலயத்துக்கு ஆடம்பரமான கோபுரம் அவசியமில்லை. ஆலயத்தின் வரலாற்றை எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்துவதற்கு கோபுரங்கள் உள்ளிட்ட நிர்மாணப் பணிகள் அவசியம்தான்; ஆனால், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அவற்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

கல்வியால்தான் எதனையும் சாதிக்க முடியும்; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் கல்வியால்தான் ஏற்படுத்த முடியும். இன்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தை இந்தக் கிளிநொச்சி மண்ணைச் சேர்ந்த மாணவன் தனதாக்கியுள்ளான்.
இந்தப் பிள்ளைகள் அனைவரும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர்க் காலத்தில் சிறு குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அந்தப் போரின் கொடூரம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதன் வலியை அவர்கள் ஆழமாக உணர்ந்திருப்பார்கள். பல குடும்பங்கள் அந்தப் போரில் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டன. அப்படியானதொரு கொடிய துயரம் நிகழ்ந்து, அழித்தொழிக்கப்பட்ட இந்தக் கிளிநொச்சி மண்ணிலிருந்து, மிகக் குறுகிய காலத்துக்குள் தேசிய மட்டத்தில் ஒரு மாணவன் உச்சத்தைத் தொட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த மாணவர்களின் விடாமுயற்சியே இன்று பெரும் வெற்றியாக மாறியிருக்கின்றது. ஒரு முயற்சி தோல்வியடைந்தால் நாம் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என அர்த்தமில்லை. நாம் எப்போது எமது முயற்சியைக் கைவிடுகின்றோமோ, அப்போதுதான் வாழ்க்கையில் தோற்றுப்போகின்றோம். இலட்சியத்துடன் உறுதியாகப் போராடினால் நினைத்ததை அடைய முடியும். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த மண்ணுக்குச் சேவை செய்ய வேண்டும். தங்களைப் போன்று அடுத்த தலைமுறை மாணவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், தமது பாடசாலையில் கற்று வெளியேறிய பழைய மாணவர்களைப் பயன்படுத்தி அடுத்தாண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவதைப் போன்று, இந்தச் சாதனை மாணவர்களைப் பயன்படுத்தி எதிர்வரும் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். இவர்களைப் பார்க்கும்போது ஏனைய மாணவர்களுக்கும் நாமும் இவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதனை முறையாக ஒழுங்கமைக்க வேண்டும்.
இறுதியாக, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சாதித்து உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஏனையோரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்ளுங்கள். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் நேர்மையைக் கைவிடாதீர்கள். அதுவே உங்களை வாழ்வில் மேலும் உயர்த்தும், என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


