எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது புதிய எரிசக்தி அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எம்.ஆர்.டி. அபோன்சு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
புதிய அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், எரிசக்தி பிரதி அமைச்சர் இலியாஸ் முஹம்மது அர்கம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து, அமைச்சர் தனது அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.
தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் சூழலால் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி நிலை குறித்து அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார். இந்த சவாலான சூழ்நிலையை கையாள்வதற்கு முன்னாள் அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே முறையான திட்டங்களை வகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மக்களின் தேவைகளை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்ய தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.
எரிசக்தி விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் வலுவான நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பான உண்மையான தகவல்களை சமூகத்திற்கு கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார். எரிசக்தி துறையின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.





