ஏ.எஸ்.எம்.அர்ஹம்
சமூக மேம்பாடு மற்றும் மனிதாபிமானப் பணிகளில் தடம் பதித்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், மாணவர்களின் நலன் கருதி மற்றுமொரு காத்திரமான செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த, தொழுகைக்கான ‘வுழு’ செய்யும் நவீன நீர் தொகுதி இன்று (21.04.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவர் நாடாவினை வெட்டி, புதிய நீர் தொகுதியை மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
மாணவர்கள் தங்களது அன்றாடக் கல்வி நடவடிக்கைகளுடன், ஆன்மீகக் கடமைகளையும் தடையின்றி நிறைவேற்றும் வகையில் இந்த ‘வுழு’ செய்யும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக மாணவர்கள் சுத்தமான முறையில் வுழுச் செய்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் பாடசாலைச் சூழலில் சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
பாடசாலைக் காலத்திலிருந்தே மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் ஆன்மீகப் பண்புகளை வளர்த்தெடுக்க இத்திட்டம் ஒரு பாலமாக அமையும். ஒரே நேரத்தில் பல மாணவர்கள் இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் இந்நீர் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ரனீஸ், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷனின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்வியறிவு என்பது வெறும் புத்தகப் படிப்போடு நின்றுவிடாமல், சமூக அக்கறை மற்றும் ஒழுக்க விழுமியங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதில் ரஹ்மத் பவுண்டேஷன் காட்டி வரும் அக்கறை பாராட்டுதலுக்குரியது. “சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதே உண்மையான சமூகப் பணி” என்பதை ரஹ்மத் மன்சூர் தலைமையிலான இவ்அமைப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இத்தகைய மனிதாபிமான முயற்சிகள், எதிர்கால சந்ததியினரின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு பலமான அஸ்திவாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.





