நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (20) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், தென் மாகாணம், குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது:
இன்று அதிகாலை வேளையில் சில பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்பட்டது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த நிலை நீடித்தது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலும் மரங்களின் அடியிலும் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.


