நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்கள் சில இடங்களில் உயர்வடைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.


