“நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் எழுந்துள்ள சவால்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது முழுச் சட்டத்தின் ஆட்சியும் பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
கடும் தொனியில் அங்கு உரையாற்றிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் மேலும் கூறியதாவது, நேற்று (8 )நாம் விவாதிக்கும் இந்த ஒழுங்கு விதிகளில், குறிப்பாக மோட்டார் வாகனச் சட்டம், சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் விதிமுறைகள் பற்றிப் பேசுகிறோம். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இது போன்ற சட்டங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், அமைதியைப் பாதுகாப்பதிலும் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது முழுச் சட்டத்தின் ஆதிக்கமும் பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
குறிப்பாக சிறைச்சாலைகளில் நடக்கும் சம்பவங்களை அடுத்து இது தீவிரமடைந்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சில வருடங்களுக்கு முன்பு இவ்வாறான சம்பவங்கள் நடந்தன, அதேபோல் மஹர சிறைச்சாலையிலும் நடந்தது. இப்போது நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் அத்தகையதொரு சம்பவம் நடந்துள்ளது.
கைதிகளின் நெருக்கடி ஒரு காரணம் என்று நாம் கூறினாலும், சிறைச்சாலைகளுக்குள் நிலவும் ஒரு குறிப்பிட்ட கலாசாரமும் இதற்கு முக்கிய காரணியாகும். அங்குள்ள ‘”செல்வாக்கு” மிக்க கைதிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளைப் பெறுவது மட்டுமன்றி, ஏனைய கைதிகளையும் அவர்கள் துன்புறுத்தும் நிலைமை காணப்படுகிறது. அதேபோல், சிறைச்சாலை அதிகாரிகளுக்குள்ளும் ஊழல்மிக்க அதிகாரிகள் இருப்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் குறித்து நாம் வருத்தமடைவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கைதிகள் ஆன்மீக ரீதியில் தங்கள் மதங்களைப் பின்பற்றுவதற்கான இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அண்மைய காலமாக, குறிப்பாக முஸ்லிம் கைதிகள் தங்களின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த இடங்கள் தொடர்பில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலை: அங்கு “எல் ஹோல்” (L Hall) என்ற மண்டபம் உள்ளது. அதில் பல பிரிவுகள் உள்ளன. அங்கு மேன்முறையீடு செய்துள்ள அதிக அளவிலான கைதிகள் இருக்கிறார்கள். இந்த மண்டபத்தின் 3 ஆவது மாடியில் பௌத்த மதக் கடமைகளுக்கான ‘போதி மழுவ’ ஒன்றும், 2ஆவது மாடியில் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கான தேவாலயம் ஒன்றும் உள்ளது. அதேபோல், கீழ் தளத்தில் முஸ்லிம்கள் தொழுவதற்கான ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. எங்கள் பாராளுமன்றத்திலும் ஒரு தொழுகை அறை இருக்கிறது, நீங்களும் போகிறீர்கள், நாங்களும் போகிறோம்.
அது போன்றுதான், இந்த வெலிக்கடை சிறைச்சாலையிலும் தினமும் ஐந்து வேளை தொழுகைக்காக 30 முதல் 40 பேர் வரை ஒன்று கூடித் தொழுது வந்தனர். ஆனால், தற்போது அந்த தொழுகை அறை திடீரென மூடப்பட்டுள்ளது. அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதுகுறித்து உடனடியாக ஆராய வேண்டும்.
மஹர சிறைச்சாலையில் இருந்த பள்ளிவாசல் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அண்மையில்கூட , பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, நீதி அமைச்சர் எங்கோ உள்ள அதிகாரிகள் கொடுத்த பதில்களையே இங்கு கூறினார்.
அமைச்சர்கள் தங்களுக்கு அதிகாரிகள் தரும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமே தவிர, இங்கு வந்து கிளிப்பிள்ளை போல அதைக் கூறக் கூடாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, இனவாத அடிப்படையில் செயற்பட்ட சிலர் இணைந்து, மலாய் சிப்பாய்களின்
காலத்தைச் சேர்ந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டனர். இப்போது சிறைச்சாலை அதிகாரிகள் இல்லாத பொல்லாத கதைகளைக் கூறுகிறார்கள், அமைச்சரும் அதையே இங்கு பேசுகிறார். இது முற்றிலும் பொய். அந்த பள்ளிவாசல் இருந்த இடத்தில் இப்போது வேறு மதக் கடமைகள் நடக்கின்றன.
முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அது இன்னும் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் முனீர் முழப்பர் இதில் தலையிட்டு, பாதுகாப்புப் போதாது என்பதால் வேறு இடத்திற்கு மாற்றுவதாகக் கூறுகிறார். இத்தனை வருடங்களாகப் பாதுகாப்பாக இருந்த பள்ளிவாசலை மூடிவிட்டு எதற்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்? அது பழைய இடத்திலேயே அமைந்திருக்க வேண்டும்.
இன்று கமன்தி விக்ரமசிங்க எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையை நான் பத்திரிகையில் பார்த்தேன். தற்போதைய சிறைச்சாலைகளின் குறைபாடுகள் குறித்து அந்தப் பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மிக முக்கியமான சில விடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்; இவை விவாதிக்கப்பட வேண்டும்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயந்த பெர்னாண்டோ இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தற்காலிகக் குழுவின் விசாரணை இந்த ஒரு சம்பவத்துடன் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. ஒட்டுமொத்த சிறைச்சாலை அமைப்பிலும் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற பரந்த கோணத்தில் இது அமைய வேண்டும். ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பும் (Criminal Justice System) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, மரண தண்டனைக் கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களின் தண்டனைக் குறைப்புக்கான (Remission) உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு ஒரு கடுமையான மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இக்குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் போன்றோர் இருந்தாலும், சிறைச்சாலைகளின் ஓய்வுபெற்ற ஆணையாளர் நாயகம் ஒருவரும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். அப்போதே சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் (Prisons Ordinance), பொலிஸ் கட்டளைச் சட்டம் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும்.
அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 60 வீதமானோர் போதைப்பொருள் குற்றவாளிகள் அல்லது மிகச் சிறிய தொகையான அபராதத்தைச் செலுத்த முடியாதவர்கள் ஆவர். வறுமையில் வாடும் மக்களைத் தண்டிக்கும் இந்த நிலை மிகவும் பாரதூரமானது. மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நிதியத்தை உருவாக்கி, இத்தொகையைச் செலுத்த முடியாதவர்களை விடுவிக்க எளிய தீர்வைக் காண வேண்டும்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகக் கருதி அவர்களுக்குச் சிறைச்சாலைகளுக்குப் பதிலாக முறையான புனர்வாழ்வு மையங்கள் (Rehabilitation Facilities) வழங்கப்பட வேண்டும்.
அதேவேளையில், சில சிறைகளில் முஸ்லிம் கைதிகள் ஐந்து வேளை தொழுவதைத் தடுக்கும் இந்த இனவாத அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்களின் தொழுகை அறைகள் மீள வழங்கப்பட வேண்டும். மஹர சிறைச்சாலை பள்ளிவாசலும் அதன் அசல் இடத்திலேயே மீண்டும் நிறுவப்பட வேண்டும். அதிகாரிகள் தரும் தவறான அறிக்கைகளை மட்டும் நம்பாமல், களத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசு பார்த்து, இந்த இனவாதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.


