நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.
அந்த வகையில் குறித்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்யும் வகையில் நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.