ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னின் பார்சிலோனா கழகம் இன்று லா லீகா போட்டியில் தனது பரமை வைரியான றியல் மட்றிட் கழகத்துடன் இன்று மோதுகிறது.
மட்றிட் நகரில் உள்ளூர் நேரப்படி இன்றிரவு 9.00 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை 1.30 மணிக்கு) இப்போட்டி ஆரம்பமாகும்.
இவ்விரு கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் பொதுவாக ‘எல் கிளசிக்கோ’ என அழைக்கப்படுகின்றன. முழுக் கால்பந்தாட்ட உலகினதும் கவனத்தை ‘எல் கிளசிக்கோ’ ஈர்ப்பது வழக்கம்.
ஆனால், இப்போட்டியைவிட பார்சிலோனா கழகம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளே செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. றியல் மட்ரிட்டும் பார்சிலோனாவுக்கு எதிரான சட்டநடவடிக்கையில் பங்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்பானிய கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் குழுவின் முன்னாள் உப தலைவர் ஜோஸ் மரியா என்ரிகுவெஸ் நெக்ரேய்ராவுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு பல வருடங்களாக மில்லியன் கணக்கான யூரோ பணத்தை பார்சிலோனா கழகம் வழங்கியமை தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜோஸ் மரியா என்ரிகுவெஸ் நெக்ரேய்ராவுக்குச் சொந்தமான ‘டா ஸ்னில் 95’ எனும் நிறுவனத்துக்கு 2001 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 7.3 மில்லியன் யூரோ பணத்தை பார்சிலோனா வழங்கியுள்ளதாக ஸ்பானிய வழக்குத்தொடுநர்கள், நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மத்தியஸ்தர் குழுவே ஸ்பானிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான நடுவர்களைத் தெரிவு செய்கிறது.
தவறு எதனையும் தான் செய்யவில்லை எனவும், தொழிற்சார் மத்தியஸ்தர் பணி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிக்கைகளுக்காகவே இப்பணம் வழங்கப்பட்டதாகவும் பார்சிலோனா கழகம் தெரிவித்துள்ளது.
ஆனால், போட்டிகளில் மத்தியஸ்தர்களிடமிருந்து தனக்குச் சாதகமான தீர்மானங்களைப் பெறும் நோக்குடன் இப்பணம் வழங்கப்பட்டதாக ஸ்பானிய வழக்குத் தொடுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பார்சிலோனா கழகத்தின் முன்னாள் தலைவர்களான சான்ட்ரோ ரொசெல், ஜோசப் மரியா பார்டேமே, மத்தியஸ்தர் சங்கத்தின் உப தலைவர் நேக்ரேய்ரா உட்பட பலருக்கு எதிராக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
பார்சிலோனா கழகத்தின் முன்னாள் தலைவர்கள் ரொசெல், பார்டோமியு ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளதாக வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர். பணத்துக்கு மாற்றீடாக, பார்சிலோனாவின் போட்டிகளின்போது, அக்கழகத்துக்கு சாதகமாக மத்தியதர்களின் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவ்விருவரும் நெக்ரேய்ராவுடன் இரகசிய, வாய்மூல உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தனர் என வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர்.
எனினும் உண்மையிலேயே பார்சிலோனாவுக்கு ஆதரவாக பக்கச்சார்பான தீர்மானங்கள் மத்தியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெய்னின் லா லீகா போட்டிகளில் 26 தடவைகளும் கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய சம்பியன் கிண்ணப் போட்டிகளில் 5 தடவைகளும் சம்பியனான பார்சிலோனா மீதான இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இக்குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்த பின்னர் பார்சிலோனா விளையாடிய போட்டிகளின்போது பார்சிலோனாவுக்கு எதிராக ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரைவான உள்ளக விசாரணைக்கு பார்சிலோனா கழகம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் ஜோன் லபோர்ட்டா தெரிவித்துள்ளார்.
“இக்குற்றச்சாட்டு பிரச்சாரங்கள் பார்சிலோனாவின் நலன்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கானவை. ‘பார்கா’ ஒருபோதும் மத்தியஸ்தர்களை வாங்குவதில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், “மத்தியஸ்தர் சங்கத்தின் உப தலைவருக்கு பார்சிலோனாவின் கொடுப்பனவுகள் அசாதாரணமானவை. எமது கால்பந்தாட்டத்தின் புகழ் கேள்விக்குறியாகியுள்ளது, நான் வெட்கப்படுகிறேன்” என லா லீகா தலைவர் ஜாவியர் டேபாஸ் விமர்சித்துள்ளார்.
பார்சிலோனாவின் பரமை வைரியான ரியல் மட்றிட் கழகமும், பார்சிலோனாவுக்கு எதிரான விசாரணை செயன்முறைகளில் ஒரு ‘பாதிக்கப்பட்ட தரப்பாக’ இணைந்துகொள்வதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்புகளை நீதிபதி அழைக்கும்போது றியல் மட்றிட் ஆஜராகும் என அக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே பார்சிலோனா, றியல் மட்றிட் கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
தற்போதைய ‘லா லீகா’ தொடரில் இவ்விரு கழகங்களும் தலா 25 போட்டிகளில் விளையாடியுள்ளன.
தற்போது பார்சிலோனா 65 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்புச் சம்பியனான ரியல் மட்றிட் 56 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் உள்ளன.