புத்தளம் நகரில் நேற்று (13) ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் எதிர்பாராத அளவு மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டன.
புத்தளம் நகர எல்லைக்குற்பட்ட வாஹித் பள்ளி, தாரிக் பள்ளி, அக்ஸா பள்ளி, குபா நகர், கடையாகுளம், அஷ்ரபிய்யா, நூர்பள்ளி பகுதி, கரைத்தீவு, இலவன்குளம், இஸ்மாயில்புரம், வேப்பமடு, இரண்டாம் கட்டை, தில்லையடி, பாலாவி, நாகவில்லு, கல்பிட்டி, நூர் நகர் மற்றும் கரிகட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் சாகிரா தேசியக் கல்லூரி, புத்தளம் இந்து கல்லூரி மற்றும் தில்லையடி பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையான வெள்ளம் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கினர்.
இதேவேளை புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை வெள்ளத்தில் மூழ்குண்டதால் அங்கு பயின்ற மாணவச் செல்வங்கள் அவர்களது பெற்றார்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் புத்தளம் தில்லையடி, அல்-ஜித்தா, ரத்மல்யாய, அல்காஸிமி சிட்டி போன்ற பகுதிகள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மிகவும் பாரதூரமாக பாதிப்புக்குள்ளாகின.
குறித்த பகுதியில் உள்ள சில வீடுகள் சுமார் சுமார் 8 அடி வரை நேரில் மூழ்கியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த டித்வா புயல் பாதிப்பைவிட அதிகமான பாதிப்பு இம்முறை ஏற்பட்டுள்ளதாகவும், பாரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த கிராமங்களில் உள்ள குறுக்கு வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை தொர்வதினால், குறித்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் இருந்து வருவதுடன், இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை அரச அதிகாரிகள் விரைந்து பெற்றுக்கொடுக்கவேண்டியது மிக முக்கிய அடிப்படை விடயமா பார்க்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை முடிவடைந்ததன் பின்னரே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிகள் எந்த அளவு பாதிக்கபப்ட்டுள்ளது என்ற முழுமையான விடயம் தெரியவரும்.










