Sponsored Advertisement
HomeERUKKALAMPIDDYபுத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version