மறைந்த பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் எனும் தலைப்பில் கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையினால் வெளியிடப்பட்ட நூலின் அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை (07.09.2023) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் கொழும்பு தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கௌரவ பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை பேராசிரியர் சுமதி சிவமோகன் கருத்தாளமிக்க நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
ஓய்வு நிலை வரலாற்றுத்துறை பேராசிரியர் B. A. ஹுஸைன்மியா அவர்கள் ‘நான் கண்ட ஹஸ்புல்லாஹ்’ எனும் தலைப்பில் பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ்வுடனான தனது 45 வருட பன்முக உறவின் சுருக்கத்தை உணர்வு பூர்வமாக முன்வைத்தார்.
பேராசிரியர் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ என்ற இந்த நூலாக்க முயற்சி குறித்து கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும் ஒய்வுநிலை அரபு மொழித்துறை பேராசிரியருமான மெளலவி M. S. M. ஜலால்டீன் சிறப்புரை நிகழ்தினார்.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தான் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நின்று சமூகப் பணியாற்றியவர். பல்வேறு தேசிய அமைப்புகளுடனும் இணைந்து தனது பணிகளை அவர் முன்னெடுத்திருக்கிறார். அந்த வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் இடையிலான சமூகப் பணிசார் தொடர்பு பற்றி ஜமாஅத்தின் உதவிப் பொதுச் செயலாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பிரதம செயற்திட்ட அதிகாரியுமான M.H.M. ஹஸன் கருத்துரைத்தார்.
அவ்வாறே பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தேசிய சூரா சபையுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஆய்வாளராக கடமையாற்றுகின்ற, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மாணவர் M. அஜிவடீன் கருத்துரை வழங்கினார்.
சகோதரர் M. L. M. தெளபீக் அவர்களால் நெறியாக்கம் செய்யப்பட்ட நூல் அறிமுக விழாவில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பணியாற்றுகின்ற பல்வேறு சமூக தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஆண்களும் பெண்களுமாக பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் போது முக்கிய பத்து பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பம் சார்பாகவும் கொழும்பு வாழ் எருக்கலம்பிட்டி மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கௌரவ தலைவர் லுக்மான் சஹாப்டீன் அவர்களால் நிறைவுரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டு நூல் அறிமுக விழா நிறைவு செய்து வைக்கப்பட்டது.