Sponsored Advertisement
HomeLocal Newsமக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளினால் மக்கள் அச்சம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளினால் மக்கள் அச்சம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகளில் தகவல்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற செய்திகள் வௌியாகியுள்ளதாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.

இருந்தபோதிலும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வருகை தரும் அதிகாரிகள் தேவையற்ற விடயங்களையும், கணக்கெடுப்புக்கு அப்பாற்பட்ட கேள்விகளை வினவுவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக எத்தனை கையடக்க தொலைபேசிகள் பாவிப்பதாகவும், வீடுகளில் ஏதேனும் போக்குவரத்து வாகனங்கள் இருப்பின் அதுபற்றிய மேலதிக விடயங்களை துருவித்துருவி வினவுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலே மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்க பயப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version