எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.