யாழ்ப்பாணத்தில் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் நேர்ந்த அதிர்ச்சி: அதீத ஒளி அலங்காரத்தால் கண்பார்வை பாதிப்பு!
யாழ்ப்பாணம் பிரான்பற்று பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் வருடாந்த திருவிழா வழமைபோல் பக்தர்கள் புடைசூழ களைகட்டியிருந்தது. ஆனால், அந்த உற்சாகமும் பக்திப் பரவசமும் சில மணி நேரங்களிலேயே பெரும் பதற்றமாகவும் அதிர்ச்சியாகவும் மாறும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
திருவிழா அலங்காரத்திற்காக ஆலய வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த மிக அதிக பிரகாசமுடைய மின்விளக்குகளே இந்த விபரீதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. கண்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்த அதீத ஒளியை எதிர்கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அடுத்தடுத்துப் பார்வை தொடர்பான உபாதைகள் ஏற்படத் தொடங்கின.
கண்களில் தாங்க முடியாத வலி, கடுமையான எரிச்சல் மற்றும் கண்களைத் திறக்கவே முடியாத அவஸ்தை எனப் பக்தர்கள் வரிசையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். நிலைமையின் தீவிரம் கருதி அவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை 157 பேர் பார்வை குறைபாடுகள் மற்றும் உபாதைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 58 ஆண்களும், 44 பெண்களும் அடங்குவதோடு, 55 பிஞ்சுக் குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை தீவிரமடைந்து வரும் சூழலில், யாழ் மாவட்ட செயலாளர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு மிக அவசர அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளனர்.நேற்றைய தினம் குறித்த ஆலய உற்சவத்திற்கு வருகை தந்த எவராக இருந்தாலும், பார்வை தொடர்பான அறிகுறிகள் தென்படாவிட்டாலும் கூட உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் மிகக் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




