ஜூட் சமந்த
ஆனமடுவ பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரமாகந்த மலையின் பின்புற பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், ஏப்ரல் 17 அன்று காலை 7.30 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, அத்துப்பாக்கி வெடித்ததில் தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர். இருப்பினும், உயிரிழந்த நபர் எதற்காக அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆனைமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


