கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஸ்ரீசாந்த், இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் வரிசையில் அடுத்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணி, மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா. இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் லோகன் இயக்குகிறார். இவர் நாயகனாக அறிமுகாகும் படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. கிரிக்கெட் வீரர் ஷிவம் துவே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆம்ஸ்டர்டாம் நகரில் குடும்பத்துடன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரெய்னா, வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் பேசினார்.
”சினிமா எனக்கு பிடிக்கும். கதாநாயகனாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் எனக்கு பிடித்த இடம். இங்கு நிறைய ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் கண்டுள்ளேன். தமிழ் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையும் கூட. கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்” என்றார்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் போன்றோர் நடித்துள்ளனர். இவர்களில் ஹர்பஜன் சிங் 2021ல் வெளிவந்த ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய கவனத்தைப் பெறவில்லை. அதற்கடுத்து அவர் திரைப்படங்களில் நடிப்பதைவிட்டு விட்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் படமாக தமிழ்ப் படமான ‘எல்ஜிஎம்’ என்ற படத்தைத் தயாரித்தார். 2023ல் வெளிவந்த அந்தப் படம் ஓடவில்லை. அதற்கடுத்து திரைப்படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளார் தோனி.
ஹர்பஜன், தோனி ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்காத வெற்றி, சுரேஷ் ரெய்னாவுக்குக் கிடைக்கட்டும் என வாழ்த்துவோம்.